க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் இஸட் புள்ளி தரவரிசையில் ஒழுங்கீனங்கள் ஏற்பட்டமைக்கான காரணங்களை கண்டறிவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று வியாழக்கிழமை விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் காமினி சமரநாயக்க மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளை இக்கூட்டத்திற்கு அழைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
'இஸட் புள்ளி தரவரிசையில் மாத்திரம்தான் ஒழுங்கீனங்கள் உள்ளன. பெறுபேறுகளில் பிரச்சினை இல்லை. எனினும் சில சக்திகள் இவ்விடயத்தில் அரசியல் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அதற்கு நாம் அனுமதிக்கப் போவதில்லை' என அவர் கூறினார்.
இதேவேளை, அநுராதரபும், குருநாகல், வவுனியா, திருகோணமலை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த சில பாடசாலைகளின் அதிபர்கள் தமக்கு நேற்று மாலை 3 மணிவரைகூட இப்பெறுபேறுகள் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment