Thursday, December 1

இலங்கை சிறுவர்களை வெளிநாடுகளுக்கு விற்ற கிறிஸ்தவ கன்னியாஸ்திரி கைது



கல்கத்தாவில் அன்னை திரேசாவினால் ஆரம்பிக்கப்பட்ட மிசனரியினரின் (Missionaries of Charity convent) கொழும்பு கிளையின் கன்னியாஸ்திரி மடம் ஒன்றை சேர்ந்த அருட்சகோதரி ஒருவர் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்று வந்த சம்பவம் ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.   இவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என்றும் நாளை நீதிமன்றில் நிறுத்தப்படுவார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

அருட்சகோதரி மேரி லிஸா என்பவர் மீது அம்மடத்தில் குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் பெற்ற குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வதற்காக கர்ப்பிணித்தாய்மார்கள் வைக்கப்பட்டிருந்தார்கள் என்று சிறுவர் பராமரிப்பு அதிகாரிகள் முறைப்பாடு தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் அம்மடத்தின் மீது திடீர் சோதனை நடத்தினர்.

அச்சோதனையில் வயதுக்கு வராத (18வயதுக்கு குறைந்த) இளம் கர்ப்பிணி ஒருவர் இருக்கக்கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கிறிஸ்தவ தேவாலயத்தினர் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். வயதுக்கு வராத சிறுமி ஒருவர் கர்ப்பிணியான பின்னர் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் வைத்திருப்பது ஒரு குற்றம் என்றும் அச்சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதால் கர்ப்பிணியாகி இருக்கலாம் என்றும் காவல்துறை உதவி அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்நிலையத்தில் சட்டவிரோதமாக கருத்தரிக்கும் இளம்பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு விற்று வந்ததாகவும், அநாதைகுழந்தைகளை பராமரிப்பதாக வாங்கி வெளிநாடுகளுக்கு விற்று வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் இக்குற்றச்சாட்டை இம்மிசனறியினர் மறுத்துள்ளனர்.

கைதான அருட்சகோதரி ஒரு இந்திய பிரஜை. அவர் தற்போது உயர்பாதுகாப்புசிறையில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் கண்காணித்து வருகின்றது. கொழும்பு திருச்சபை அருட்சகோதரி மீதான குற்றச்சாட்டை நிராகரித்திருக்கின்றது. குழந்தைகளை விற்று அதற்கான பணத்தை பெறுவது தொடர்பில் திருச்சபைக்கு சம்பந்தமே இல்லை என்று திருச்சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment