Wednesday, November 23

எகிப்து இரண்டாம் கட்டம்: இடைக்கால அரசும் ராஜினாமா!

November 23, 2011
எகிப்தில் இரண்டாம் கட்டமாக இராணுவ அரசுக்கு எதிராக போராட்டக் களம் கண்டுள்ள பொதுமக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.


ஹோஸ்னி முபாரக் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஏற்பட்ட மக்கள் புரட்சியின் விளைவாக, இராணுவம் தலைமையில் இடைக்கால அரசு எகிப்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இராணுவத்துக்குத் தனிப்பட்ட அதிகாரங்கள் வழங்கும் சில சட்டங்களை இடைக்கால அரசு நிறைவேற்றியது.


இதற்கு எதிராக மீண்டும் எகிப்தில் பொதுமக்கள் போராட்டக் களத்தில் குதித்தனர். இதனைத் தொடர்ந்து இராணுவத்துக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இராணுவ அடக்குமுறையில் இரு தினங்கள் முன் 33 பேர் உயிரிழந்தனர்...

எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள சுதந்திர மைதானத்தில்(தஹ்ரீர் ஸ்கொயர்) துவங்கிய இந்த இரண்டாம் கட்டப் போராட்டம், நாடு முழுவதும் தீ போன்று பரவியது. ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டம் அளவுக்கு இந்த இரண்டாம்கட்டப் போராட்டமும் வலுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இராணுவ இடைக்கால அரசு திடீரென ராஜினாமாவை அறிவித்தது.


இதன்மூலம், எகிப்து மக்களின் இரண்டாம்கட்டப் போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது. புதிய அரசு அமையும் வரை இடைக்கால அரசின் அமைச்சரவை தொடரும் எனத் தெரிகிறது. இம்மாதம் 28 ஆம் தேதி எகிப்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment