[ ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011,
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பேச்சு மூலம் ஒரு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழர்களுக்கு குறைந்தளவு உரிமைகள், தீர்வுகள் வழங்கப்படுமாயின் அதற்கு நான் ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டேன். நீதியான ஒரு தீர்வு கிடைக்கப் பிரதமர் என்ற வகையில் பாடுபடுவேன் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள 214 இந்து ஆலயங்களின் புனரமைப்புப் பணிகளுக்கான நிதி வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில், இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் டி.எம். ஜயரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சிங்கள மக்கள் சுகபோகங்களை அனுபவிக்க நினைத்தால் ஒருபோதும் பிரச்சினைக்குத் தீர்வை எட்டமுடியாது. அதுபோல தான் ஏனைய இன மக்களும் தமது தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு மட்டும் தீர்வுகாண வேண்டும் என நினைத்தால் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை எட்டமுடியாமல் போய்விடும்.
இன, மத பேதங்களை மறந்து நாம் இலங்கையர் என்ற வகையில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண ஒன்றிணைய வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குப் பேச்சு மூலம் தீர்வு காணப்பட வேண்டும். ஒரு நியாயமான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதுவே தமிழ் மக்களின் விருப்பமும் கூட.
தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் வழங்கப்பட்டே ஆக வேண்டும் எனவும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை எனவும் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் கல்வித் தரம் மிக உயர்ந்ததாக உள்ளது.
அப்படியிருக்கும் போது எமது பிரச்சினைகளை நாம் ஏன் பேசித் தீர்க்க முடியாமல் இருக்கின்றோம். பிரச்சினைக்குத் தீர்வுகாண மூவின மக்களினதும் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதமர் ஒவ்வொரு ஆலயத்துக்கும் தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சில்வேஸ்திரி அலன்ரின், மு.சந்திரகுமார், அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஆகியோர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment