நேற்று சனிக்கிழமை அன்று அறப்லீக்கில் இருந்து சிரியா இடைநிறுத்தப்பட்டுள்ளது. வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை சிரியா மீறியுள்ளதே இதற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறப்லீக்கின் வரலாற்றில் அது எடுத்த ஒரு துணிச்சலான முடிவாக இது பார்க்கப்படுகிறது.
சிரியாவின் எதிரணியான சிரிய தேசியப் பேரவையுடன் அறப்லீக் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. இப்பேச்சுவார்த்தை எகிப்தில் இடம்பெறவுள்ளது.
டமஸ்கஸிலிருந்து அறபு நாட்டுத் தூதுவர்களை வாபஸ் பெறுமாறும் அது கோரியுள்ளது. சிவிலியன்களைப் பாதுகாப்பதற்காக அறப்லீக் ஐ.நா. உட்பட பல சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளும் எனவும், இரத்தம் சிந்துவது உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அது வேண்டியுள்ளது.
சிரியாவின் மத்திய நகரான ஹும்ஸில் தொடர்ந்தும் பலர் கொல்லப்பட்டு வருகின்ற நிலையிலேயே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
‘‘எல்லா அறபுத் தலைவர்களும் ஒன்றையே சொல்கின்றனர். அசதின் ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. சிரியாவில் மாற்றம் இப்போது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது என” வெளிநாட்டு அவதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment