Sunday, November 20

பலஸ்தீனுக்கு இந்தியா 51 கோடி ரூபா நிதியுதவி


பலஸ்தீனுக்கு 2011-12 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதியுதவியாக ரூ.51 கோடியை இந்தியா அளித்துள்ளது. இந்த நிதியுதவிக்கான காசோலையை "ஐக்கிய நாடுகளின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான அமைப்பிடம்', இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ. அகமது வெள்ளிக்கிழமை அளித்தார். ஐ.நா. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அமைப்பின் ஆணையாளர் ஃபிலிப்போ கிராண்டியிடம் இக்காசோலை கையளிக்கப்பட்டது.

இந்நிதியுதவி குறித்துக் கருத்துத் தெரிவித்த அகமது, காஸாவிலுள்ள ஐ.நா.மீட்பு அமைப்பின் உதவியினால் நடத்தப்படும் பள்ளிகளில் பயிலும் 76,000 குழந்தைகளின் உணவுத் தேவைக்காக இந்நிதி உதவி வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். பலஸ்தீன் அகதிகளின் பாதிப்புகளை நீக்கும் பொருட்டு இத்தகைய நிதியுதவியை வருடந்தோறும் இந்தியா தொடந்து வழங்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
இரண்டு நாள் பயணமாக பலஸ்தீனத்துக்குச் சென்றுள்ள அமைச்சர் அகமது, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான "இப்ஸப்', ரமல்லாவில் கட்டியுள்ள பலநோக்கு விளையாட்டரங்குத் திறப்பு விழாவில் கலந்து கொள்வார்.
மேலும் பலஸ்தீன் அதிபர் மகமூத் அப்பாஸையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் மாலிக்கையும் அவர் சந்திக்கவுள்ளார்.
மத்திய கிழக்கு ஆசியாவிலுள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பலஸ்தீன் அகதிகளுக்கு, ஐ.நா. மீட்புப் பணிகள் அமைப்பே கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களில் உதவி செய்து வருகிறது. 2009-10 ஆம் ஆண்டிலிருந்து இவ்வமைப்புக்கு அளித்து வந்த நிதியுதவியை இந்தியா உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment