மோதல்கள் மற்றும் சமாதானம், அரசியல், ஆட்சி என்பனவற்றின் அடையாளம்
ஒரு சிப்பியானது சூழலிருந்து துகள்களை உறிஞ்சியெடுத்து முத்துக்களை உருவாக்குகிறது. அப்படியில்லாமல் அது எல்லாத் துகள்களையும் வடிகட்டி வெளியேற்றியிருப்பின் அது ஒரு கீழ்நிலைப் பிறவியாகவே வாழவேண்டியது அதன் தலைவிதியாக எழுதப்பட்டிருக்கும்.
நாடுகடத்தல்கள், ஆக்கிரமிப்பு அலைகள், கைப்பற்றப்பட்ட அரசுகள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட பயணிகள் என்பனவற்றின் வழிகளில்தான் சிங்களமக்களின் இனப்பெருக்கம் இந்த ஸ்ரீலங்காத் தீவில் உருவானது என்பது புதிய தலைமுறைக்கு சொல்ல மறந்த ஒரு கதை. நாடுகடத்தப் பட்டவர்கள் வெற்றி கொள்ளப்பட்டவர்கள், மற்றும் ஏதிலிகள், சில உன்னதமானவர்கள் பெரும்பாலும் அப்படியல்லாதவர்கள் ஆகியோரின் பிள்ளைகள்தான் இவர்கள். முற்றுகைக்குள்ளாகியவர்கள், எதிர்த்து நின்றவர்கள். மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஆகியோரை உறிஞ்சியெடுத்து ஒரு முத்து உருவாவதைப்போல உருவாக்கிப் பெற்ற கலவைதான் அவர்கள்.
காலப்போக்கில் சிங்களவர்கள் ஒரு இனம் மற்றும் கலாச்சாரம் என்பனவற்றில் இந்தியாவின் கலாச்சாரத்திலிருந்து தங்களை வேறுபடுபடுத்தி வரையறுத்துக் கொண்டார்கள். .இது அதிகப்படியாக எதிர்நோக்கும் ஒன்றின் முக்கியத்துவத்தை குறைத்து காண்பிக்கிறது என்ற வகையில் பாராட்டத் தக்க ஒன்று. நாம் பல வண்ணக் கடல்களுடாக நீந்தி வெளிவந்த போதும் இன்னும் பலவற்றை அறிந்து கொள்ளவேண்டிய இனமாகவே இருக்கிறோம்….ஆனால் நாங்கள் மிகவும் தைரியமாக வேறுபாடுகள் யாவற்றையும் தெளிவாக உய்த்துணர்ந்து கொண்டோம் என்கிற நம்பிக்கையுடன் மிகவும் அற்புதமாக நம்மைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்கள் வெளித்தோற்றம் இணைக்கப்பட வேண்டியது மற்றும் நாம் கலந்துறவாடிய சமூகங்களில் உள்ள, பழங்குடியினர், அவுஸ்திரேலிய – நீக்ரோ கலப்பு வேடர்கள், ஜெயம் கொண்ட திராவிடர்கள், சிறைக்கைதிகள் மற்றும் வேலையாட்கள், பரந்த அராபிய நிலப்பரப்பை சேர்ந்த மூர் இன வணிகர்கள் மற்றும் மாலுமிகள், சிங்கள அரசர்களுடன் போரிட்ட இந்தோனசிய தீவுகளைச் சேர்ந்த கூலிப்படைகள், ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் மதப்பிரச்சாரர்கள், சீன வணிகர்கள், ஆபிரிக்க முத்துக் குளிப்பவர்கள், மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் நிச்சயம் தமது விதைகளை இங்கே விதைத்திருப்பார்கள். சந்தேகத்துக்கு இடமற்ற மரபணுப் பாய்ச்சல் உட்செலுத்தப் பட்டதினால் மட்டுமே நாம் அழகுபடுத்தப் பட்டிருக்க முடியும். மற்றும் அந்த அழகுபடுத்தலின் விளைவாகத்தான் நாம் கவனிக்கத் தக்க ஒரு இனமாக இணைந்துள்ளோம். இவ்வாறு கவனிக்கத்தக்க விளைவுகளைக் கொண்ட ஒரு இனமாக இருப்பதால்தான் நாம் தனிமைப் படுத்தப்படும் அபாயத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
ஒரு நாட்டின் ஆட்சியாளர்களுக்கு இனப்படிநிலைகளை வரையறுத்தல் மற்றும் பெரும்பாலும் இனக்குழுக்களை தனிமைப்படுத்தல் போன்ற சிறப்புரிமைகள் இருப்பது என்னவோ உண்மைதான். எனவே உலகமெங்கும் இது இலகுவாக நடைபெறுகிறது. அத்தோடு இனங்களுக்கான வரைவிலக்கணம் எப்போதும் பொதுவான ஒன்றாகவும் மற்றும் அரசியல் வினைத்திறன்களைக் கையாளுவதற்கு திட்டமிட்ட ஒரு கருவியாகவும் பயன்படுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் நாட்டை ஆளும் முயற்சியில் ஸ்ரீலங்காத் தலைவர்களும் அதை ஊசலாட விட்டுள்ளார்கள். இந்த வரையறை சிலநேரங்களில் தவிர்க்கமுடியாதபடி அபாயகரமான நிலைக்கு நெருக்கமாகத் தள்ளப்பட்டு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இனத்துக்கான வரையறை அவசியமாக இருந்த போதிலும் காலப்போக்கில் அந்த மகத்தான நாடு எங்களை ஒரு நாயின் பற்களுக்கிடையில் சிக்கி நசிபடும் ஒரு எலும்புத் துண்டைப்போல கவலைப்படவைக்க தீர்மானிக்கிறது. ஆனால் இனக்குழுக்களை பல படிகளாக வகுப்பது ஒரு ஆபத்தான விளையாட்டு. இந்த விளையாட்டின்போது ஆட்டக்காரர் தாம் விளையாடுகிறோம் என்பதையே மறந்து விடுகிறார்கள்.
கடந்த பல நூற்றாண்டுகளாக ஸ்ரீலங்காவில் இனக்குழுக்களை படிநிலைப்படுத்துவது அவர்களின் தனிச்சிறப்புகள் மூலம் கூர்மையான படிகம் போன்ற அடுக்குகளிலிருந்து மாறுபட்டு வந்துள்ளது. அரிதான சில சந்தர்ப்பங்களில் இந்த இனப் படிநிலை மென்மையான கரைந்து போகும் சர்க்கரைக் கட்டியைப் போலவும் அமைந்திருந்தது. சமீபத்தைய நினைவுகளை மீட்டிப் பாhக்கும்போது காலனித்துவ காலப்பகுதியில் இந்த இனத்தின் தனித்துவம் என்பது மிகவும் மங்கிப்போயிருந்தது. பொதுவான எதிரியுடன் போராடும்போது பல பிரிவான இனச் சமூகங்கள் பொதுத் தன்மையை அங்கீகரித்து பரவி வரும் மேற்கத்தைய கலாச்சாரத்தை எதிர்கொண்டனர். 1948ல் பிரித்தானியரின் வெளியேற்றத்தால் உருவான வெற்றிடத்தை ஸ்ரீலங்காவின் அனைத்து இனங்களிலுமிருந்த ஆர்வமும் உணர்வும் கொண்ட தேசியவாதிகள் நிரப்பினார்கள். ஆனால் வெகுவிரைவிலேயே பெரும்பான்மையினர் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியதும், சிறுபான்மை அரசியல்வாதிகள் நாட்டின்மீது கொண்டிருந்த தீவிரப்பற்று ஆறத் தொடங்கி விட்டது. இப்போது ஏகாதிபத்தியவாதிகளை துரத்தியடித்து விட்டாலும் இனப்பிளவுகள் திரும்பவும் பிரதான கவனத்துக்கு சுழன்று திரும்பியுள்ளது.
சுதந்திரத்துக்குப் பின்னான காலப்பகுதியில் தீவின் ஆட்சியாளர்கள் அனைவரும் பெரும்பான்மை சிங்கள இனத்தவர்களாகவே இருந்தனர்.அநேக தடவைகளில் இந்த தலைவர்கள் அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்பட்டு இன மேன்மை எனும் ஆபத்தான கடலில் சுலபமாக மோதிக்கொள்ளும் இனவேறுபாட்டு அலைகளை உலாவ விட்டுள்ளார்கள். முன்னணியில் நிற்கும் சிங்களவர்களாகிய நம்மை பெரும்பாலும் இந்த அரசியல்வாதிகளால் நமக்குள் செலுத்தப்படும் இன மேன்மை எனும் நஞ்சை அளவுக்குமீறி உட்கொண்டாலும் எதுவும் செய்யாது. அதற்கு மேலாக சகிப்பும் சமத்துவமுமே புத்தமதத்தின் தனித்தன்மை என்பதை மறந்துவிட்ட புத்தமதத் துறவிகளில் ஒரு பகுதியினர் தம்மை சிங்கள பேரினவாதத்துடன் ஆர்வமாக இணைத்துக்கொண்டுள்ளார்கள், அரசியல்வாதிகள் சிலசமயங்களில் அவர்களை மறந்து விடும்போது இந்த புத்தமதத் துறவிகள் உள்நோக்கத்துடன் தூய சிங்கள இனம் எனும் பதாதைகளை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.இது சிங்களவர்கள் இடையில்கூட வேறுபட்ட படிநிலை ஒன்றை உருவாக்கியுள்ளது,கிறீஸ்தவ மதத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் தாங்கள் தாழ்வுபட்டதைப் போன்ற ஒரு நிலையை உணருகிறார்கள்.
1956ல் எழுந்த மோசமான சிங்களம் மட்டும் கூக்குரலால் உடனடியாக ஒரு தண்ணீர் தொட்டியின் அடைப்பைத் திறந்து விட்டதுபோல் சிங்களவர் அல்லாத ஸ்ரீலங்காவாசிகள் கூட்டமாக நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினார்கள். அப்படி வெளியேறியவர்களில் பெரும்பான்மையானவர்கள் போர்த்துக்கேயர், டச், மற்றும் பிரித்தானிய காலனித்துவத்தால் ஸ்ரீலங்காவாசிகளுடன் இணைந்த கலப்பினால் உருவான பரம்பரையான பறங்கியர்கள். அவர்களுடைய மொழி ஆங்கிலமாகவிருந்தது. அவர்கள் நூற்றாண்டுகளாக தீவெங்கிலும் தாங்கள் குடியிருந்த கிராமங்களையும் நகரங்களையும் காலிசெய்து போய்விட்டார்கள், அவர்கள் போகும்போது சர்வதேச மொழிக்காக சிங்களவர் தயாராக வைத்திருந்த வழியையும் தங்களுடன் எடுத்துச்சென்று விட்டார்கள். அந்த இனவரையறை அலையானது சிங்களவர்களில் ஏற்படுத்திய மறுதாக்கம் காரணமாக அதன்பிறகு வந்த தலைமுறையினரில் ஆங்கிலம் பேசுவோருக்கு பஞ்சம் ஏற்பட்டது.
மிகப்பெரிய சிறுபான்மை இனத்தவரான ஸ்ரீலங்காத் தமிழர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த சிங்களம் மட்டும் முன்னுரிமைகளுக்கு பதிலளிக்க நீண்டகாலம் போராடினார்கள். அவர்களின் இறுதியான பிரதிபலிப்பு பெற்றுத் தந்ததுதான் வன்முறையான எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு, அது பைத்தியக்காரத்தனமாக கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் வரை நீண்ட உள்நாட்டுப் போரை உருவாக்கியது. எல்.ரீ.ரீ.ஈ தலையை உயர்த்தி அதன் பற்களால் நாசம் விளைவித்தபோது, ஆரம்பத்தில் சிங்களவர்கள் பயங்கரமான இனக்கலவரங்கள் மூலம் திருப்பித் தாக்கினார்கள். அதன் காரணமாக பயங்கரமான ஏதோ நடக்கப்போகின்றது என்கிற முடிவுக்கு அனைத்து சிறுபான்மையினரையும் இட்டுச் சென்றது. ஆனால் அந்தக்கலவரங்களின் முக்கிய தாக்கங்களுக்கு ஆளான தமிழர்களின் கோபம் அவர்களை எங்கள் கரைகளை விட்டு அப்புறப்படுத்தியதுடன் மட்டுமல்லாது அதற்கும் மேலாக மோசமான எல்.ரீ.ரீ.ஈ அமைப்புடன் ஒத்திசைவு காண்பிக்கவும் வைத்தது. இறுதியாக 2009ல் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு தோற்கடிக்கப் பட்டது, மற்றும் அதனால் எற்பட்ட சேதங்களை ஆராய சிங்களவர்களுக்கு இன்னும் ஓய்வு கிடைக்கவில்லை.
தமிழர்கள் சிங்களவர்களுடனான நீண்டகால கூட்டின் காரணமாக தோற்றம் வரையறை செய்யப்பட்டு உள்பிணைப்புள்ளதாய் இறுக்கமாக நெய்யப்பட்ட கலாச்சாரப் பிணைப்பொன்றை உருவாக்கியுள்ளார்கள். எங்கள் சமையல் வகைகள், எங்கள் ஆடைகள், எங்கள் கலைகள் மற்றும் கட்டிடக் கலை போன்ற அனைத்துமே நாங்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட திராவிடர்களிடமிருந்து பிரதிபலித்தவைகளே, ஆனால் அவைகளை நாங்கள் தத்தெடுத்துக் கொண்டபோது பௌத்த மதத்தினால் அவை மழுங்கடிக்கப்பட்டு சுருக்கப்பட்டன. அதனால் அது தனித்தன்மையை பெற்றுக்கொண்டது. எங்கள் சமய வழக்கங்களான பால் பொங்க வைப்பதிலிருந்து ஊதுபத்தி ஏற்றுவது வரையான பழக்கங்களும் மற்றும் விளக்கு காவுதல் போன்றவை சிங்களவர்கள் பௌத்த தத்துவங்களிலிருந்து ஒரு மதத்தை உருவாக்கியபோது இந்தமத செல்வாக்கு கடன் வழங்கிய சடங்குகளேயாகும். நாங்கள் வெகு தெளிவாக வேறுபடுத்தப்படுவது எங்களுடைய மொழியினால்தான் ஆனால் அப்போதுகூட நைந்துபோன அதன் மொழியியல் வேர்கூட ஒரே நாட்டைச் சேர்ந்த நமது தமிழர்களுடையது என்று நமக்குத் தெரிவிக்கிறது.
20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில், சிங்களவர்கள். தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் தோளோடு தோள் நின்று நாங்கள் அனைவரும் ஸ்ரீலங்காவாசிகள் அல்லது இன்னும் கீழ்படிவுடன் சொல்வதாகவிருந்தால் இலங்கையர்கள் என்ற தன்மையுடன் போராடி பிரித்தானியர்களை தோற்கடித்து காலனித்துவத்தை அகற்றினார்கள். இது பொதுவான ஒரு நாட்டுப் பற்று அது விளக்குவது இந்த நாட்டின் மீது கொண்ட பொதுவான நேசத்தை. இது மெதுவாக நமது தலைவர்களின் செயல்முறையினால் நாம் சிறுபான்மை இனங்களைக் கைவிடும் வரை இது இருந்தது.பழைய தலைமுறையைச் சேர்ந்த புலம்பெயர் ஸ்ரீலங்கா மக்கள் ஒரு தொலைதூர உள்நாட்டுக் காதலால் ஏங்கித் தவித்தார்கள். தாங்கள் விட்டுச்சென்ற நாட்டின் வாழ்க்கையை நினைவுபடுத்தி தொடர்ச்சியாக மின் அஞ்சல்கள் பரிமாறப்பட்டன. எப்பொழுதெல்லாம் சந்தர்ப்பம் கிடைத்தாலும். தங்கள் நண்பர்களோ குடும்பங்களோ இங்கு இல்லாவிட்டாலும்கூட தங்களின் பழைய நாட்டுக்கு சாதாரண ஒரு மறுவரவுபோல இந்த குடியேற்றக்காரர்களில் பெரும்பாலானவர்கள் இங்கு வருகை தருவதை விரும்பினார்கள். வெளிநாட்டு மண்ணில் அவர்கள் வாழும் வாழ்க்கை முறையினை நன்கு தழுவிக்கொண்ட ஒரு குடியேற்றக்காரரால் இந்த தொலைதூர வாழ்க்கைப் பாணியை தனது நினைவிலிருந்து வெகு சுலபமாக அகற்றிவிடக் கூடியதாகவிருந்தும் அவர்கள் இங்கு வருகை தருகிறார்கள். உயர் மாநிலமான நியுயோர்க்கின் காட்டுப்பகுதி தோட்டமொன்றில் அரை நூற்றாண்டுக்கு முன்பே நாட்டை விட்டுச் சென்ற ஸ்ரீலங்காவாசி ஒருவருக்குச் சொந்தமாகவுள்ள நாட்டுப்புற வீடொன்றில் வைத்து வெள்ளை வால்களைக் கொண்ட ஒரு சோடி மான்கள் எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டன, அவற்றின் பெயர்கள் மான் மற்றும் முவா என்பதாகும். இந்த இணைபிரியாத மான்கள், மானுக்கு தமிழிலும் சிங்களத்திலும் அழைக்கப்படும் பெயர்களைக் கொண்டிருந்தது, கலைந்து போன ஒரு கனவை என்னைத் திரும்பவும் காணவைத்தது.
ஸ்ரீலங்காவின் வடபகுதியில் யுத்தத்தின் பின்னான மீள் குடியேற்றப் பகுதிகளில் ஒன்றில் வைத்து முஸ்லிம் சிறார்கள் கிரிக்கட் போட்டியில் ஸ்ரீலங்கா குழுவுக்கல்ல பாகிஸ்தான் குழுவுக்கு ஆதரவாக குரலெழுப்பிக் கொண்டிருந்ததை நான் காணநேர்ந்தது. வெளிநாடொன்றின் மீதான இந்தப் பற்று எப்போது ஆரம்பமானது? நெருங்கிய குடும்ப நண்பர்களாக முஸ்லிம்களைக் கொண்ட ஒரு சூழலில்தான் நான் வளர்ந்தேன், மற்றும் ஸ்ரீலங்கா மண் மற்றும் அதன் அரசியல் என்பனவற்றின் மீது அவர்கள் கொண்டிருந்த பற்று என்பன நான் கணித்ததைவிட ஒருபோதும் வேறுபட்டதில்லை. சில வேளைகளில் நுட்பமான மாற்றங்கள் ஒன்று சேர்ந்து வழங்கிய உந்துதல்; மற்றும் இன ரீதியாக வரையறுக்கப்பட்ட அரசியற் கட்சிகளின் நடைமுறைகள் மற்றும் அடிப்படைவாதங்கள் என்பன முஸ்லிம் உலகத்தை துடைத்து மாற்றிவிட்டன போலும், ஸ்ரீலங்காவிலுள்ள முஸ்லிம் இளைஞர்கள் ஒரு திருப்புமுனையை அடைந்துள்ளார்கள். அவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து எதிர்காலத்தில் எங்களுடன் சேர்த்துக் கொள்ள இன்னும் நேரம் இருக்கிறதா என்பது தெரியவில்லை?
கொப்பளிக்கும் வெய்யிலிலும் மற்றும் தூசியிலும், யுத்தத்துக்குப் பின் மன்னாரில் மீள்குடியேற்றம் நடைபெற்ற இடத்திலுள்ள தற்காலிக பாடசாலையொன்றில் நான் அமர்ந்திருந்து, பாடசாலை மாணவர்கள் தங்கள் அபிமானத்தக்குரிய கிரிக்கட் வீரர்களின்; பெயர்களை கூறிக்கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருந்தேன், ”அஃப்ரிடி, கான், ஷா……மாலிங்க” நான் எனக்குள் எண்ணிக் கொண்டேன் நாங்கள் முழு மனதுடன் முயற்சி செய்தால்,நம்பிக்கைக்கான ஒளி வீசுவதற்கு இன்னும் இடமிருக்கிறது.
சிங்களவர்களாகிய எங்களுக்கு மற்ற எல்லா இனங்களிடமிருந்து கடன்வாங்கியும் மற்றும் பகிர்ந்து கொண்டும் தனித்துவமான இனம் என்பதை வெளிப்படுத்த பல்லாயிரம் வருடங்கள் போராட வேண்டியிருந்தது. இப்போது நாங்கள் இந்தச் சிறிய தீவில் முக்கியமாக எமது அந்தஸ்தின் உச்சமாகிய உயர்ந்த இனம் என்ற நிலையை அடைந்து விட்டோம். எப்படியாயினும் நாம் எங்களது வேறுபாடுகளை உயர்த்திக்காட்டுவதின் மூலம் நாம் தனித்தன்மையானவர்கள் என்பதை நிரூபிக்க தொடர்ந்து முயற்சிப்போம். கூடப் பழகும் இனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஆகாரங்களை நாங்கள் மறுக்கும்போது மட்டும்தான் நாம் எமது தனித்தன்மையை இழந்துவிடுவோம் என நான் உணர்ந்தேன். மாறாத இந்த இனமுயற்சிகளினால் நாம் பலவற்றை அந்நியமாக்கியதுடன், நமது வாழ்வில் மிகவும் சுவையூட்டக்கூடியவற்றிலிருந்து நம்மை நாமே பிரித்தக் கொண்டோம்.இந்த தீவில் நாங்கள் குடியிருந்த காலம் முதல் எங்களுடனே குடியிருக்கும் சிறுபான்மை இனத்தவரை இரண்டாம் தரத்தினரைப் போலவும் அதிகம் வரவேற்பில்லாதவர்களைப் போலவும் எண்ணும்படி செய்து விட்டோம் அப்படிச் செய்ததினால் சகல ஸ்ரீலங்கா மக்களும் சமமான தேசப் பற்றுள்ளவர்களாக மாறி நாங்கள் அடைந்திருக்கக்கூடிய பாரிய நலனை நாம் இழந்துவிட்டோம்?
பன்மைத்துவம் வெகு ஆழமாக உட்பொதியப்பட்டது,எப்பொழுதாவது நாங்கள் அதிலிருந்து எங்களை தனியாக்க முயற்சித்தால் அந்த அறுவைச் சிகிச்சையின் வலி அதிகமாக இருக்கும். மேம்பாட்டுக்காக முஸ்லிம் உணவு வகைள் நம் வாழ்க்கையில் சேர்வதை ஒதுக்கி வைப்போமானால் நாம் மட்டுமே ஏழைகளாக இருப்போம், இந்துக் கடவுள்கள் பல சிங்களவர்களுக்கு ஆறுதல்களை வழங்குகின்றனர். நமது கலாச்சார போட்டிகளில் காட்டுப்பகுதி வேடர்களையும் சேர்த்துக் கொள்வது, பறங்கியரின் பைலா பாட்டுகள் மகிழ்ச்சியை தருகின்றன… இவைகளை எல்லாம் நாம் ஏன் முயற்சித்துப் பார்க்கக் கூடாது.நாம் நமது தனித்துவமான இனம் என்பதில் திடமாகவும் மற்றும் நமது பழைய செல்வாக்கினை விட்டுக் கொடுக்காமலும் இருப்போமானால் ஒருவேளை நாம் இடைநிறுத்தப்பட்டு நாம் எதை மறுக்கிறோம் என்பதனை ஆராய வேண்டும்….. இதனால் நாங்கள் என்ன காணப்போகிறோம்?
ஒரு சிறிய இனம் தனிமைப்படுத்தப் படுமானால் அதை வளர்ப்பதற்கு மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது. வருடங்கள் செல்லும்போது நாம் நமக்குச் சொந்தமான சிறிய தீவில் நமது சொந்த வற்புறுத்தல் காரணமாக நேரெதிராகத் தனிமைப்பட்டு நிற்கும்போது, இதற்குத்தானா உண்மையில் நாம் இவ்வளவு பாடுபட்டோம் என்று சிங்களவர்களாகிய நாம் வியப்படைவோம்? தனிமைப்படுவதற்கு வேண்டிய தனது சொந்த அழுகை மூலம் ஒரு இனம் அமைதியடையுமானால், அதன் தனித்துவத்தை அளக்க எந்த அளவுகோலும் பயன்படாது.
(யோகராஜ் யோகசுந்தரம் (1927 – 2011) அவர்களின் நினைவாக)
(தமிழில்: எஸ். குமார் – நன்றி தேனீ)
No comments:
Post a Comment