திட்டம் கைவிடப்படவில்லை தொடர்ந்தும் ஆராய்கிறோம் - அசாத் சாலி
முஸ்லிம் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் முஸ்லிம் பாடசாலைகளின் நோன்பு கால விடுமுறையை இரத்துச் செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறது. இத்திட்டம் கைவிடப்படவில்லை என இத்திட்டத்தை அமுல் நடத்துவது தொடர்பில் முன்னின்று செயற்பட்டு வரும் முன்னாள் கொழும்பு மாநகர பிரதிமேயர் அசாத் சாலி தெரிவித்தார்.
குறித்த திட்டம் தொடர்பில் வினவியபோதே அசாத் சாலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த வாரம் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இதில் கலந்து கொண்டனர். கலந்துரையாடலின் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட திட்டத்துக்கு உடன்படாமையினால் திட்டம் கைவிடப்பட்டுவிட்டதாக அமைச்சர் தெரிவித்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஜம்இய்யத்துல் உலமாவுடன் கலந்தாலோசிக்கவில்லை - உலமா சபை செயலாளர்
இத்திட்டம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை.
இருப்பினும் எமது சமூகத்திலுள்ள கல்விமான்கள், புத்திஜீவிகளுடன் கலந்தாலோசித்து தீர்வு பெறப்பட வேண்டும் என ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் தெரிவித்தார்.
எது எவ்வாறிருப்பினும் முஸ்லிம் சமூகம் கல்வித்துறையில் வளர்ச்சிபெற வேண்டும்.
கடந்த காலங்களில் ஆசிரியர்களிடம் சமூக உணர்வுகள் அதிகமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. அவர்கள் தமது நேரத்தை மாணவர்களுக்குத் தியாகம் செய்தார்கள். ஆனால் இந்நிலைமை தற்போது மாற்றம் பெற்று வருகின்றமை கவலைக்குரியதாகும். எனவே இது விடயத்தில் அவசரப்பட்டு முடிவெடுப்பதைதத் தவிர்த்து இத் திட்டத்தின் சாதக பாதகங்கள் தொடர்பில் சகல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார்.
தனித்துவ உரிமையில் கைவைக்கும் செயல் - மு.கா. செயலாளர்
நோன்பு கால விடுமுறையை இரத்துச் செய்ய முயற்சிப்பது எமது தனித்துவ உரிமைகளில் கைவைக்கும் முயற்சியாகும். இது பெரும்பான்மை சமூகத்துக்கு துணை போகிறவர்களின் செயல் என ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
எமது பாரம்பரிய உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்கள் மடையர்கள் அல்லர்.
முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் கிழக்கு மாகாணம் கல்வியில் பெரிதும் வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்த அபிவிருத்தி இலக்கினை மேல் மாகாண பாடசாலைகளில் காணமுடிவதில்லை. பாடசாலைகளின் அபிவிருத்தியில் அரசியல்வாதிகளும் சமூகமும் கரிசனை காட்டாமையே இதற்குக் காரணம். இதை விடுத்து கல்வியின் அபிவிருத்திக்கென விடுமுறையை இரத்துச் செய்வது கேலிக்குரியதாகும் என்றார்.
அரசியல் கலப்பில்லாது உலமா சபை கையாள வேண்டும் - பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
நோன்பு கால விடுமுறையை இரத்துச் செய்யும் திட்டத்தின் நன்மை தீமைகள் ஆராயப்பட வேண்டும். இது விடயத்தில் அரசியல் கலப்பிருக்கக் கூடாது. இத்திட்டம் தொடர்பான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முன்னெடுப்பதே சிறந்தது என சிறுவர் நலன், மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
`அண்மையில் கல்வி அமைச்சில் நடைபெற்ற இத்திட்டம் அமுலாக்கல் தொடர்பான கலந்துரையாடலில் நான் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தேன். ஏனெனில் இது முஸ்லிம்களின் பொதுவான பிரச்சினை. இது 1942 ஆம் ஆண்டிலிருந்து நாம் அனுபவித்து வரும் உரிமையாகும். முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பேசும்போதும் மாற்றங்களைச் செய்யவிளையும் போதும் அது பொதுவாக கலந்துரையாடப்பட வேண்டும். அவ்வாறு கலந்துரையாடப்பட்டாலே சுமுகமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சமூகத்தின் புத்தி ஜீவிகளையும் கல்வியியலாளர்களையும் சமூக நல அமைப்புக்களையும் அரசியற்கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து கலந்துரையாடல்களை நடத்தலாம். அரசியல் ரீதியான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டால் தீர்வுகள் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் உருவாகும்.
நான் இத் திட்டத்தை முழுமையாக எதிர்க்கவில்லை. ஆனால் இத்திட்டத்தின் நன்மை தீமைகள் ஆராயப்பட்டு சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் அமுல்நடத்தப்பட வேண்டும். அரசியல் ரீதியான முன்னெடுப்புக்கள் இடம்பெறக் கூடாது என்றார்.
No comments:
Post a Comment