நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலும் உதோயா தீவிலும் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய 73 பேரை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அண்டெர்ஸ் பேரிங் பிரீவிக், தான் இக்கொலைகளுக்கு பொறுப்பேற்பதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஆனால் தான் குற்றவாளியல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
32 வயதான பிரீவிக், நேற்று திங்கட்கிழமை ஒஸ்லோ நீதிமன்றமொன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். தனது பிரசாரத்திற்கு நீதிமன்றத்தை பயன்படுத்த திட்டமிட்ட பிரீவிக், சீருடையொன்றை அணிந்து வருவதற்கும் பகிரங்க நீதிமன்ற விசாரணையில் பங்குபற்றுவதற்கும் அவர் சட்டத்தரணி மூலம் அனுமதி கோரியிருந்தார்.
எனினும் பாதுகாப்பு பிரச்சினையையும் முஸ்லிம்கள் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான விசமப் பிரசாரத்திற்கும் அவர் நீதிமன்றத்தை பயன்படுத்துவார் என்பதாலும் அதிகாரிகள் இதற்கு தடை விதிக்கக் கோரினர். நீதிபதி அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.
பிற்பகல் 1.30மணியளவில் அவர் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டார். அவர் விரும்பிய 'சீருடைக்கு' அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிவப்பு நிற 'ஜம்பர்' ஆடை அணிந்திருந்தார்.
பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் நீதிமன்றின் முன்னாள் குழுமியிருந்தனர். ஆனால் மூடிய அறையொன்றுக்குள் விசாரணை நடைபெற்றது.
எனினும் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு விசாரணையின் பின்னர் நீதிபதி கிம் ஹேகர் இவ்விசாரணை குறித்த தகவல்களை வெளியிட்டார்.
மேற்கு ஐரோப்பாவை முஸ்லிம்கள் கைப்பற்றுவதை தடுப்பதற்கு இந்நடவடிக்கை அவசியம் எனவும் நோர்வேயின் ஆளும் தொழிற்கட்சி பாரிய குடிவரவையும் பல்கலாசாரத்தை ஊக்குவிப்பதன்மூலம் ராஜதுரோகம் செய்கிறது எனவும் பிரீவிக் கூறியதாக நீதிபதி ஹேகர் தெரிவித்தார். தொழிற்கட்சியின் இளைஞர் முகாமிலேயே பிரீவிக் துப்பாக்கிப் பிரயோம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நோர்வேயையும் மேற்கு ஐரோப்பாவையும் மார்க்ஸிச கலாசாரத்திலிருந்தும் முஸ்லிம்களிடமிருந்து 'பாதுகாப்பதற்கு' தான் விரும்பியதாக பிரீவிக் நீதிமன்றில் கூறியுள்ளார். அதிக எண்ணிக்கையானோரை கொல்வது தனது நோக்கமல்ல எனவும் ஆனால் தொழிற்கட்சிக்கு ஒரு சமிக்ஞையை வழங்க விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் தனக்கு மேலும் இரு 'அலகினர்' உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தான் ஏன் இன்நடவடிக்கையை செய்தார் என்பதை விளக்குவதற்கு பிரீவிக் ஆர்வம் கொண்டிருந்தாக ஏனைய நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் தனது பிரச்சார அறிக்கையையை பிரீவிக் வாசிக்க ஆரம்பித்தபோது அது தடுக்கப்பட்டதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை, தான் ஏன் இன்நடவடிக்கையை செய்தார் என்பதை விளக்குவதற்கு பிரீவிக் ஆர்வம் கொண்டிருந்தாக ஏனைய நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் தனது பிரச்சார அறிக்கையையை பிரீவிக் வாசிக்க ஆரம்பித்தபோது அது தடுக்கப்பட்டதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
சுமார் 35 நிமிடநேரம் இவ்விசாரணை நடைபெற்றது.
அதன்பின் பிரீவிக்கை 8 வார காலம்வரை பிரீவிக்கை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி கிம் ஹேகர் உத்தரவிட்டார். குறைந்தபட்சம் ஓகஸ்ட் 22 ஆம் திகதிவரை அவர் தனிமையில் வைக்கப்பட்டிருப்பார்.
அத்துடன் செப்டெம்பர் 26 ஆம் திகதிவரையான இந்த விளக்கமறியல் காலம் முழுவதும் அவரை யாரும் சந்திக்க முடியாது. கடிதங்கள், பத்திரிகைகளை வாசிக்கவோ தொலைக்காட்சி பார்க்கவோ முடியாது. தனது சட்டத்தரணியை மாத்திரம் அவர் சந்திக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment