Tuesday, July 12

அரசு கூறுவது போல் சேனல் 4 வுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது : சரத் என் சில்வா




இலங்கை அரசு கூறி வருவது போல் தனிப்பட்ட ஊடகம் ஒன்றுக்கு எதிராக ஒரு நாடு சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை போர்க்குற்றம் தொடர்பில், இலங்கையின் கொலைக்களம் (Sri Lanka's Killing field) எனும் ஆவண தொகுப்பை அண்மையில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.

இதில் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான போலியான தரவுகள் காண்பிக்கப்படுவதாகவும், சேனல் 4 ஊடகத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து நஷ்ட ஈடு அல்லது பொது மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்த போவதாகவும் இலங்கையின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கை அரசின் இப்பிரச்சாரத்தை நம்பவேண்டாமென தெரிவித்துள்ள சரத் என் சில்வா, எல்லை பிரச்சினை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மட்டுமே சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியும். இலங்கை அரசு கூறியுள்ளது போல், வெளிநாட்டு தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

அப்படி முடியுமென்றால், இலங்கை ஊடகங்களில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படும் போது அந்நாடுகளும் வழக்கு தொடர முடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டுமென அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த ஆவண காட்சிகளால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் யாரேனும் அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பிரித்தானிய நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையின் கொலைக்களம் வீடியோ தொகுப்பில் இலங்கையின் தனிநபர் எவரையும் குறிவைத்தது அவதூறு ஏற்படுத்தும் விதமாக காட்சிகள் சொருகப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment