Friday, June 24

புதிய அரசியல் பிரவேசங்கள்: சில ஆலோசனைகள் - உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்சூர்




 








இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு மிக முக்கியமான மைற்கல். எனினும் அரசியற் கொள்கை சம்பந்தமான தெளிவு இல்லாமையாலும், அரசியற் போராட்ட ஒழுங்கு, உத்திகள் பற்றி திட்டமிடப்பட்ட வரைபு இல்லாமையாலும், முன்னணிப் போராளிகளோ, அடிமட்டத்தினரோ நன்கு பயிற்றுவிக்கப்படாமையாலும் அது முஸ்லிம் அரசியல் வரலாற்றின் திருப்புமுனையாக அமைய முடியாமல் முடங்கித்தேங்கிப் போய் பாரம்பரிய முஸ்லிம் அரசியற் போக்குக்கே மீண்டு சென்று விட்டது.


முஸ்லிம் சமூகத்தின் பொதுமக்கள், இளைஞர்கள், படித்தவர்களுக்குமத்தியில் புதியதொரு அரசியற் பிரவேசம் தேவை என்ற பரவலான கருத்துள்ளது. அது பற்றி பூரணமான தெளிவோ, அறிவோ இல்லாவிட்டாலும் இத்தேவை பரவலாக உணரப்படுகிறது. ஆங்காங்கே அது பற்றி பேசவும் படுகிறது. இந்நிலையில் ஆங்காகங்கே தேர்தல்களில் கலந்து கொள்கின்றமையும் நிகழ்ந்து வருகிறது. இப்புதிய அரசியல் நுழைவுகள் இஸ்லாமிய பேர்களைக் கொண்டிருப்பதும் அவதானிக்கத்தக்கது. காத்தான்குடியில் நல்லாட்சிக்கான அரசியற் கட்சி திட்டமிடப்பட்ட கவனமானதொரு அரசியற் பிரவேசம். கிண்ணியாவிலும், மூதூரிலும் இம்முறை இவ்வாறான முயற்சிகள் நடந்துள்ளன. கிழக்குக்கு வெளியேயும் சில ஊர்களில் முஸ்லிம் அரசியல் குறித்து ஆங்காங்கே பேசப்படுகிறது.

இவ்வாறு புதியதொரு அரசியற் பிரவேசம் நிகழத்துவங்கியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸை அடுத்து இன்னுமொரு அரசியற் போராட்ட ஒழுங்கு களத்திற்கு வந்துள்ளது. இந்த அரசியற் போராட்ட சக்திகள் பற்றி கவனம் செலுத்துதல் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. முஸ்லிம் புத்திஜீவிகளும், இஸ்லாமிய அறிவுஜீவிகளும் இப்புதிய அரசியல் போக்கு பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து அச்சக்கதிகளை நெறிப்படுத்த முயலவேண்டும். அதுபற்றி சில ஆலோசனைகளை முன்வைக்கவே இங்கு முயல்கிறோம்.

  • அரசியல் செயற்பாடு என்பது கட்டமைப்பு, சிந்தனை, மக்கள் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. அரசியற் செயற்பாடு மிகச் சரியாகவும், பயனுள்ளதாகவும், தொடராகவும் இருக்க வேண்டுமானால் அச்சசெயற்பாடு பொருத்தமான கட்டமைப்பு, தனக்கென ஒரு சிந்தனை, என்பவற்றைக் கொண்டு மக்கள் மத்தியில் இயக்கம் கொண்டதாக அமையவேண்டும் இம் மூன்று அம்சங்களும் பூரணமாக அமைந்து விட்டால் இப்போது கீழ்வருவனவற்றை நிகழ்த்துமாறு அவற்றை நெறிப்படுத்த வேண்டும்.

-     மக்கள் பிரச்சினைகளை அறிவியல்பூர்வமாக வரையறுத்தல்
-     அதற்கான மிகப் பொருத்தமான தீர்வுகளை முன்வைத்தல்
-     காணப்படும் தெரிவுகளை விவாதிப்பதற்கான அறிவு பலம்.
-     மக்களைக் கட்டமைக்க மக்கள் அபிப்பிராயத்தை உருவாக்குவதற்
கான இயங்கும் சக்தி
  • தீர்வுகளை நடைமுறைக்குக் கொண்டுவர சக்திகளைத் திரட்டலும், அவற்றை இயக்கிவிடலும்.
முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பிரிந்து பல்வேறு பகுதிகளில் உருவாகி வரும் இப்புதிய அரசியல் சக்தி மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டும். அப்போது அவற்றில் இரு விடயங்கள் எம் கவனத்தை முக்கியமாக ஈர்க்க வேண்டும்.
  • அரசியல் சிந்தனை
எமது சிந்தனை இஸ்லாம் எனப் பொதுப்படையாக சொல்லல் இங்கு பொருந்தாது. அத்தோடு இஸ்லாமிய அடிப்படையிலான அரசியல் ஒரு பயங்கரவாதமாக நோக்கப்படும் இக்காலப்பிரிவில் இது பற்றிய ஆழ்ந்த கவனம் தேவை. நாம் சிறுபான்மையாக வாழ்கிறோம் என்றவகையிலும் அரசியல் சிந்தனை என்பது வித்தியாசமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தனித்தனியாகப் பல்வேறு பகுதிகளில் உருவாகி வரும் இப்புதிய அரசியல் சக்திகளில் ஒன்று விடும் தவறு அனைத்தையும் பாதிக்கும் என்பது மட்டுமல்லாது இப்புதிய அரசியல் பிரவேசத்தையும் மிகவும் கடுமையாகப் பாதிக்கும். எனவே உருவாகிவரும் இந்த அரசியல் சக்திகள் தம்மிடையே ஒரு கருத்துப் பரிமாறலுக்கு வருதல் மிகவும் முக்கியமானது.
இது கருத்தொற்றுமையை உருவாக்குவதோடு இஸ்லாமியப் பின்னணி யிலான ஒரு அரசியல் சிந்தைனையை பெரிய முரண்பாடுகளின்றியும், அடுத்த சமூகத்தினரின் வித்தியாசமான பார்வையின்றியும் முன்வைக்க உதவும்.
  • மக்கள்.
சிறுபான்மை சமூகமாக வாழ்வதால் எமது அரசியல் செயற்பாட்டுக்கு உட்படும் மக்கள் யார்? என்ற கேள்வியைக் கவனமாக எழுப்ப வேண்டிய தேவையுள்ளது.

எமது மக்கள் முஸ்லிம்கள் மட்டுமா? அவ்வாறில்லை என்பதே யதார்த்தபூர்வமான பதில். ஏனெனில் தமிழர்களோ, சிங்களவர்களோ, எமமோடு கலந்துதான் வாழ்கிறார்கள். எனவே எமது அரசியற் செயற்பாட்டுத் தளம் விரிவுபட்டு அமைகிறது அதற்கேற்ப நாம் இயங்கும் முறை குறித்து ஆழ்ந்து புரிதல் அவசியம்.

வட, கிழக்கில் தமிழர்கள், ஏனைய பகுதிகளில் பலவகை சனத்தொகை செறிவுத் தன்மை கொண்டு சிதறிய வாழ்வமைப்பை சிங்களவர்களுக்கு மத்தியில் கொண்டுள்ளோம்.

இந் நிலையில் இவ்வாறான பல்வேறு பகுதிகளின் அரசியற் செயற்பாடு குறித்த கருத்துப் பரிமாறல் இப்புதிய அரசியல் சக்திகளுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது.

2.  முஸ்லிம் உலகுபல்வேறுபகுதிகளாகத்துண்டாடப்பட்டுள்ளமைஅவர்கள்தம்எதிரிகளுக்குமுன்னால் பலமாக நிற்க முடியாத நிலைமைய ஏற்படுத்தியுள்ளது. அது அவர்களை கடுமையாகப் பாதிக்கும் ஒரு பலவீனம். அவ்வாறே ஒரு நாட்டினுள்ளே இஸ்லாமியவாதிசுகளே பல அரசியற் கட்சிகளாக சிதறியுள்ளமை இன்னொரு பலவீனம்.

சிறுபான்மை முஸ்லிம்கள், சிறுபான்மை என்ற பலவீனத்தோடு அரசியற் போராட்டம் என்ற மிகவும் அபாயகரமான  ஒரு பகுதியில் பிரிந்து சிதறுவார்களானால் அவர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளல், பாதுகாப்புடன் வாழல் என்ற மிக அடிப்படைப் பகுதிகளிளேயே பின்தள்ளப்பட்டு விடுவார்கள்.

இப்படியான புதிய அரசியல் பிரவேசங்களின் போது முஸ்லிம் சமூகத்தில் அரசியற் பலத்தை உடைக்கிறார்கள் என்ற குற்றச் சாட்டு மிகப் பரவலாகிப் பல பகுதிகளில் எழுகின்றமை அவதானிக்கத்தக்கது. இப்புதிய அரசியல் சக்திகளே பலவாக அமையுமானால் அது எவ்வாறு முஸ்லிம் சமூகத்தை மிகவும் கடுமையாகப் பாதிக்கும் என்பதனை விளக்கத் தேவையில்லை.

3. பாரம்பரிய முஸ்லிம் அரசியல் தலைமைகள் பெரும்பான்மை அரசியற் கட்சிகளின் அங்கத்தவர்களாக உள்ளனர். அவர்களின் அரசியற் தலைமைக்குப் பிரதியீடாக அமையும் வகையிலான தலைமைகள் இதுவரை தோன்றவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பத் தலைவர் அஷ்ரப் அப்படியான ஒரு தலைமையாக அமையும் சூழல் இருந்தது. சிறிது காலம் அப்படி தலைவராக அவர் மதிக்கப்பட்டார். ஆனால் அது ஒரு கொஞ்சக் காலமே. அவரின் பின்னால் அது தொடர முடியவில்லை. இத்தகைய ஒரு அரசியல் சூழ்நிலையில் இத்தகைய தலைவர்களோடு இப்புதிய அரசியல் சக்திகளின் உறவாடல் எவ்வாறு அமைய வேண்டும்.? என்பது மிக முக்கியமானதொரு கேள்வியாகும். அந்த உறவாடல் புதிய அரசியல் சக்திகள் பல கூறாகப் பிறிந்த வகையிலான உறவாடலாயின் அது பலமிக்கதாக அமையாது. அத்தோடு தமக்குள்ளேயே புதிய அரசியல் சக்திகள் முரண்பாடுகளை வளர்த்துக்கொண்டதாகவே அமையும்.

4. புதிய அரசியல் சகதிகள் தனித்தனியான பல சக்திகளாக அமையும் போது தேசியப் பொது சக்தியாக வளர்வது மிகவும் சிரமம். இந்நிலையில் அவை முஸ்லிம்களின் வாக்குகளை சிதறச் செய்து அவர்களை பலமற்றவர்களாக ஆக்கி தாமும் சமூகத்தில் ஓரத்தில் நிற்கும் சிறிய சக்திகளாகவே குந்தியிருக்க முடியும். இவ்வாறு முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் பாரியதொரு அரசியல் இடைவெளியை நீக்கவந்த சக்தி ஒதுக்கப்பட்டதாகவே மாறிப்போகும். இவ்வாறு இஸ்லாமும் எம் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையமாட்டாதோ என்ற உணர்வையே மக்களுக்குக் கொடுத்துவிடும் பாதகத்தையும் இந்நிலை ஏற்படுத்திவிடும். இதுபற்றி புதிய அரசியல் சக்திகள் மிகவும் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். இப்பிரச்சினை மிகவும் அடிப்படையான முதன்மையான பிரச்சினை என்பது நன்குணரப்பட்டு எவ்வாறாயினும் ஒருமைப்பாட்டு சக்திகளாக இவை மலர வேண்டும்.
-www.usthazmansoor.com

No comments:

Post a Comment