போரின்போது வடபகுதிக்கு உணவுப்பொருட்களையும் மருந்துகளையும் அனுப்பும் பொறுப்பு பசில் ராஜபக்சவிடமே இருந்தது என்றும் அதுதொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அவரே பொறுப்புக் கூற வேண்டும் என்ற தொனிப்படும் அறிக்கை ஒன்றை பாதுகாப்பு அமைச்சு தயாரித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் மேற்பார்வையின் கீழ் அனைத்துலக சமூகத்துக்கு கையளிப்பதற்கான அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. போர் நடைபெற்ற காலப்பகுதியில் இராணுவத்தின் நடவடிக்கைப் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளார்.
இந்த தகவலை பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவரே ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடபகுதிக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பும் பொறுப்பு பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் ஐ.நா மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைக் குழு அதிகாரிகளும் உள்ளடக்கப்பட்டிருந்தனர் என்றும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஐ.நா நிபுணர்குழு அறிக்கையில் அரசாங்கம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை போரின் போது ஆயுதமாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பசில் ராஜபக்சவே பதிலளிக்க வேண்டும் என்ற தொனியிலேயே பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை வெள்ளைக்கொடி விவகாரமும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
அதில் அரசாங்கம் சரணடைவதற்கு விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய பொதுமன்னிப்புக் காலத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது. புலிகளின் தலைவர்கள் பலர் சரணடைய எடுத்த முடிவு குறித்து பசில் ராஜபக்ச 2009 மே 17ம் நாள் காலை தெரியப்படுத்தியதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், போரின் இறுதிக்கட்டத்தில் கடும் மோதல்கள் நடந்து கொண்டிருந்ததால், அந்தத் தகவல் போர்முனைக்குச் சென்றடைய தாமதமாகி விட்டது என்றும் அந்தக் தகவல் அங்கு சென்றடைந்த போது போர் முடிந்து விட்டது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு மகிந்த ராஜபக்சவும் கோத்தாபய ராஜபக்சவுமே பொறுப்பாளிகள் என்ற வகையிலேயே இதுவரை செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், இறுதிப் போர்க்காலங்களில் இடம்பெற்ற குற்றங்களுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் உள்ள தொடர்பை பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment