மஹிந்த சிந்தனையானது எனது உடலிலும் உயிரிலும் கலந்திருக்கின்றது. அதனால்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பினை வழங்கியிருக்கின்றார். மஹிந்த சிந்தனையானது எனது உடலில் ஓடும் இரத்தத்திற்கு சமனானது என்று அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அமரர் டி.பி.விக்கிரமசிங்க, அமரர் ஹெரி அபேதீர மற்றும் அமரர் மெல் பர்ணாந்து ஆகியோர் மீதான அனுதாப பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் மேர்வின் இங்கு மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சி தற்போது உள்வீட்டு பிரச்சினைகளால் அவதிப்படுகின்றது. அந்தக் கட்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் மஹிந்த சிந்தனையில் ஒரு துளியை தருகின்றேன்.
அதன்மூலம் உங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். முன்னாள் எம்.பி. ஹெரி அபேதீர எந்தச் சந்தர்ப்பத்திலும் தனது கட்சியையோ அல்லது தலைவரையோ காட்டிக் கொடுக்கவில்லை.
அதேபோல் நாம் எமது கட்சியையோ எமது தலைவரையோ காட்டிக்கொடுப்பவரல்ல. எனது உயிருடன் மஹிந்த சிந்தனை கலந்திருக்கிறது. எனது இரத்தத்துடன் மஹிந்த சிந்தனை ஓடுகின்றது. இதனையறிந்துதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பினை வழங்கியிருக்கின்றார் என்றார்.
No comments:
Post a Comment