Tuesday, June 4

முஸ்லிம் காங்கிரஸ்- அமைச்சர்கள் குழு விசேட சந்திப்பு


slmc05ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது- கட்சியின் அதி உயர் பீட கூட்டத்தில் அரசாங்கத்தின் மீது குற்றம்: வடமாகாணத்தில் சமுர்தி உத்தியோகஸ்தர்கள் நியமனத்திலும், கிழக்கு மாகாண அமைச்சர்கள், அந்த மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கான வளப்பங்கீடு போன்ற விவகாரங்களிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் அதிஉயர் பீட கூட்டத்தில் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இவை சம்பந்தமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலத்த அதிருப்தியை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலரிடம் தெரிவித்து, அவற்றுக்கான தீர்வை பெற்றுக்கொள்வது தொடர்பில் அவசரமாக பேச்சுவார்த்தை நடாத்துவதாகவும் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற அக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (02) இரவு கொழும்பிலுள்ள கட்சியின் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் நடைபெற்ற இந்த அதியுயர் பீட கூட்டத்தில் கட்சிக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து குறிப்பாக வன்னிமாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட உறுப்பினர்களும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதியுயர்பீட உறுப்பினர்களும், ஏனைய அதியுயர்பீட உறுப்பினர்கள் சிலரும் மிகவும் ஆக்ரோஷமாகவும், காரசாரமாகவும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
நீண்ட நேரமாக இடம்பெற்ற இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கிழக்கு மாகாண நிருவாகம் ஏற்படுத்தப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய அரசாங்க அமைச்சர்களை உடனடியாகச் சந்தித்து இவைபற்றி முறையிடுவதெனவும், உரிய தீர்வுகளை தாமதமின்றி பெற்றுத்தருமாறு கோருவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ. ஹஸன் அலி திங்கள் கிழமை (03) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் தொடர்புகொண்ட போது, அவர் தாம் இன்று இரவு அமைச்சர் பெசில் ராஜபக்ஷவை சந்தித்து இதுபற்றித் தெரிவிப்பதாகவும், அதன்பின்னர் ஓரிரு தினங்களில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் குழு சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளார்.
கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் தற்பொழுது வெளிநாடு சென்றுள்ளபடியால் பிரஸ்தாப அமைச்சர்களுடனான சந்திப்பில் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஷீர்சேகுதாவூத் தலைமையில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் செயலாளர் நாயகம் ஹஸன் அலி எம்.பி தெரிவித்தார்.

No comments:

Post a Comment