முள்ளியவளையில் ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினைக்கு எந்தவொரு சமூகத்திற்கும்
பாதிப்பில்லாத வகையில் சுமூகமாகவும் இணக்கமாகவும் தீர்வு காண்பதற்கு
நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
முல்லைத்தீவிற்கு இன்று திங்கள்கிழமை (6) விஜயம் செய்த நீதியமைச்சர்
ஹக்கீம் குறித்த காணிப்பிரச்சினை தொடர்பில் முள்ளியளை சனசமூக நிலையத்தில்
நடந்த மக்கள் சந்திப்பின் போதே இதனைக் கூறினார்.
முன்னதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர்
திரு.வேதநாயகம் பிரதேச செயலாளர் திரு.பி.குகநாதன் ஆகியோர் உட்பட அரச
அதிகாரிகளுடன் அமைச்சர் ஹக்கீம் இவ்வாறான பல்வேறு விடயங்கள் குறித்து நீண்ட
நேரம் கலந்துரையாடினார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்திலிப்
பாவா பாரூக்கும் அமைச்சருடன் விஜயம் செய்திருந்தார். பிரச்சினைகளுக்கு
உரிய தீர்வுகளைக் காண்பதில் அரச அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய
நடவடிக்கைகள் பற்றி அதன் போது விரிவாக ஆராயப்பட்டது. முல்லதைதீவு மாவட்ட
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் கட்சியின் உயர்பீட
உறுப்பினருமான எம்.எச்.எம். நஜாத்தின் தலைமையில் முக்கியஸ்தர்களும் ஊர்
மக்களில் சிலரும் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
முள்ளியவளை காணிப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்கள், அமைச்சர் ஹக்கீம்
மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாரூக் ஆகியோர்
முன்னிலையில் தமது நிலைமையை எடுத்துக்கூறினார்.
அமைச்சர் ஹக்கீம் முள்ளியவளை மக்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்ததாவது,
யுத்தத்தின் அகோரம் முடிந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாகத்
திரும்பிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் முள்ளியவளையில் காணிப்பிரச்சினை
தலைதூக்கியுள்ளது.
ஏன், எதற்காக, இதனைச் செய்தார்கள் என்பதைப்பற்றி கூறுவதைவிடுத்து
இனங்களுக்கு இடையில் நிலவும் நல்லெண்ணமும் நல்லுறவும்
பாதிக்கப்படாதவிதத்தில் பிரச்சினைக்குரிய தீர்வுகளை காண்பதற்கு நடவடிக்கை
எடுக்கப்படும்.
இந்த விடயத்தை மிகவும் பக்குவமாக அணுக வேண்டும். மக்களுக்கு உரிய முறையில்
அறிவுறுத்தப்படாமல் மேற்கொள்ளப்பட்ட அவசர செயற்பாடுகள் நிலைமையை
சிக்கலாக்கியுள்ளன. சுற்றறிக்கைகள் பற்றி சாதாரண பொதுமக்கள் தெரிந்து
வைத்திருப்பதில்லை.
இப்பொழுது சிவன் பூசையில் கரடி புகுந்தது மாதிரி வன பரிபாலன திணைக்களம்
இதில் தலையிட்டு யாருக்கும் இந்த காணி கிடைக்காமலேயே போய்விடக்கூடிய
நிலைமையை தோற்றுவித்துள்ளதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எல்லாம்
இடியப்ப சிக்கலாகி விட்டது.
மனிதாபிமான அடிப்படையில் நெகிழ்வு தன்னைமயுடன் இப் பிரச்சனையை அணுகுமாறு
வன பரிபாலனத்துக்கு பொறுப்பான அமைச்சரை வேண்டவுள்ளேன். அரசியல்
பிரதிநிதிகளுடனும் பேச வேண்டியுள்ளது.
காணிப் பங்கீடு அரச அதிகாரிகளினாலேயே மேற்கொள்ளப்படும். அதில் நாம் சம்பந்தப்பட முடியாது.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைக்கேற்பவும் காணிப் படிவங்கள் வழங்கப்படுகின்றன.
வேறு காணியில்லாத பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment