Monday, May 20

பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பின் ரவூப் ஹக்கீம், அசாத் சாலி உயிருடன் தப்பியிருக்க முடியாது


சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவது, தாய்நாட்டுக்காக தமது உயிர்களைக் கொடுத்த போர்வீரர்களை அவமானப்படுத்தும் செயல் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 
ஜாதிக ஹெல உறுமயவினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட  போர்வீரர்களை நினைவு கூரும் நான்காவது ஆண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஈழப்போரில் வெற்றி பெற்றிருந்தால், இப்போது சிறிலங்காவுக்கு எதிராக அரசியல் நடத்தும் இந்திய அரசியல்வாதிகளான கருணாநிதியும், ஜெயலலிதாவும் உயிருடன் கூட இருந்திருக்கமாட்டார்கள். 
பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், அரசியல்வாதிகளான சம்பந்தன், ரவூப் ஹக்கீம், அசாத் சாலி போன்றோரும் உயிருடன் இருந்திருக்க முடியாது.  அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருக்காது போனால், தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அமிர்தலிங்கத்தின் நிலையையே அடைந்திருப்பர். 
எனவே, போரில் பெற்ற வெற்றியை அரசியல் வெற்றியாக அனைத்துலக அரங்கில் பாதுகாப்பதற்கு சிங்களவர்கள் அனைவரும் துணைநிற்க வேண்டும். 
அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கும் போது, அரசியலமைப்பில் திருத்தம் செய்யாது போனால் அது வரலாற்றுத் தவறாகி விடும்“ என்றும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment