Sunday, May 19

தமிழில் அறிக்கை விடுவதை விடுத்து உருப்படியான ஊடக மாநாட்டை கூட்டுங்கள் -முபாரக் மௌலவி


பொது பல சேனாவின் இனவாத உரைகளுக்கு விளக்கம் கொடுக்கும் ஊடக மாநாடொன்றை ஏற்பாடு செய்ய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அ. இ. முஸ்லிம் காங்கிரஸ் முன்வராமல் இருப்பது ஏன் என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பினார்.

தாருல் குர்ஆனில் நடைபெற்ற ‘ஹலால் எமது உரிமை’ என்ற தலைப்பிலான மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறியதாவது,

பொதுபல சேனா என்பது நடிகர்கள் மட்டும்தான். அதன் கதை வசனம், இயக்கம் எல்லாம் யார் என்பது முழு உலகுக்கும் புரியும். ஆனால் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு மட்டும்தான் இது புரிய மாட்டேன் என்கிறது. அ. இ. முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் பொது பல சேனாவின் கருத்துக்களை கண்டித்து தமிழ் ஊடகங்களுக்கு அழகாக அறிக்கை விடுகிறார். ஆனால் இவர் தனது கட்சி சார்பாக ஒரு ஊடக மாநாட்டை கொழும்பில் கூட்டி அதில் சிங்களம், அல்லது ஆங்கிலத்தில் பேச முடியாமலிருப்பது ஏன்?

அ. இ. மு. காங்கிரஸ் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி. இதன் தலைவர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர். இன்னொருவர் பிரதி அமைச்சர். இவர்கள் ஊடக மாநாட்டை கூட்டினால் நிச்சயம் அரச ஊடகங்கள் அதற்கு இடம் கொடுக்கும். எம்மைப்போல் ஒரு சாதாரண கட்சி கூட்டம் நடத்தினால் அரச ஊடகங்கள் கண்டு கொள்ளாது. அதுவும் பொது பல சேனாவை கண்டித்து பேசப்போகிறோம் என்றால் ஆளை விடு என ஓடி விடுவார்கள்.

இந்த நிலையில்; மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அ. இ. மு. கா வினால் மிக இலகுவாக ஒலி ஒளி ஊடகங்களை அழைத்து சேனாவின் அனைத்து கருத்துக்களுக்கும் பதிலளிக்கும் வசதிகள் அவர்களுக்கு நிறையவே உண்டு. அவற்றை பயன்படுத்த இவர்கள் தயங்கும் காரணம் என்ன என்று கேட்கிறோம்.

முழு நாட்டு மக்களுக்கும் செல்லக்கூடிய வகையில் சிங்கள, ஆங்கில ஊடகங்களை அமைச்சுக்கு அழைத்து பொது பல சேனாவுக்கு பதில் கொடுக்கலாம் அல்லவா? ஏன் இவர்களால் முடியவில்லை? இவர்களால் முடியும். ஆனால் எலும்புத்துண்டுக்கு ஆபத்து வந்து விடும் என்ற அச்சம் தவிர வேறு காரணங்கள் இல்லை.

ஆகவே, தமிழ் மொழி ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதை விடுத்து இவ்வாறான உருப்படியான ஊடக மாநாட்டை அல்லது பொதுக்கூட்டத்தை கூட்டி பொது பல சேனாவின் அற்பத்தனமான கருத்துக்களுக்கு பதில் கொடுக்க முயற்சி செய்யுங்கள் என அக்கட்சியை கேட்கின்றோம். அவ்வாறான கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தால் நாமும் சமூகமளிக்க தயாராக இருக்கின்றோம் என்பதையும் சொல்லி வைக்கின்றோம் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.

No comments:

Post a Comment