Tuesday, April 2

கோத்தாவின் கழுத்துக்கு வருகிறது மற்றொரு சுருக்கு !









மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப் புதைக்குழி விவகாரத்தில் சிறிலங்காப் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் நெருக்கடிகளை எதிர் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மாத்தளை மருத்துவமனைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் 150 பேரின் மண்டையோடுகள், எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவை 1986 – 90 காலப்பகுதியில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளவர்களின் சடல எச்சங்களே என்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜேவிபி கிளர்ச்சியின் போது, கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் சடலங்களே இவை என்று கருதப்படுகிறது.

மாத்தளை மருத்துவமனைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிக்கு சமீபமாக, சிறிலங்கா இராணுவத்தின் சித்திரவதைக் கூடம் ஒன்று 1989- 1990 காலப்பகுதியில் இயங்கியதை, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜேவிபி உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மாத்தளை விஜய வித்தியாலயத்தில் இயங்கிய இந்த சித்திரவதைக் கூடத்தை கஜபா றெஜிமென்டே இயக்கி வந்தது என்று ஜேவிபி முன்னாள் உறுப்பினரும், முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் செயலருமான புபுது ஜெயக்கொடி தெரிவித்திருந்தார்.

இந்தக் காலப்பகுதியில் மாத்தளை மாவட்ட சிறிலங்கா இராணுவ இணைப்பதிகாரியாகவும், 1வது கஜபா றெஜிமென்ட்டின் கட்டளை அதிகாரியாகவும் தற்போதைய பாதுகாப்புச் செயலரான லெப்.கேணல் கோத்தாபய ராஜபக்சவே பணியாற்றியிருந்தார்.

இந்தநிலையில், மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டால், கோத்தாபய ராஜபக்ச சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், 1987 தொடக்கம் 1990 வரையிலான காலப்பகுதியில் தமது கட்சியின் உறுப்பினர்கள் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா கோரியுள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“ஐதேக அரசாங்கத்தின் கொலைக் குழுக்களால் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பரப்புரை செய்திருந்தார்.

சூரியகந்தவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழிக்கு பொறுப்பானவர்களைத் தண்டிக்க மக்கள் முன்னணி அரசாங்கம் அயராது பணியாற்றியது.

அந்தப் பகுதி ஐதேக அரசியல்வாதிகள் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

அப்போது சிறிலங்கா இராணுவத்தின மாவட்ட இணைப்பதிகாரியாக இருந்த தற்போதைய பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவும் பதிலளிக்க வேண்டும்.

மாத்தளையில் அப்போது பணியாற்றிய அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், கிராம அதிகாரிகள், மற்றும் தமது பிள்ளைகளை இழந்த பொதுமக்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

சித்திரவதை செய்யப்பட்ட பின்னரே, கொல்லப்பட்டுள்ளனர் என்பதை சட்டமருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

சூரியகந்த புதைகுழி விசாரணை போன்று மாத்தளைப் புதைக்குழி குறித்தும் விசாரிக்க சிறிலங்கா அதிபரைக் கோருகின்றோம்.

ஐதேக அரசுக்கு எதிராக, அப்போது ஒரு மனிதஉரிமைச் செயற்பாட்டாளர் என்ற வகையில் ஜெனிவாவில் உள்ள ஐ,நா மனிதஉரிமைகள் பேரவையில், காணாமற்போனவர்களின் படங்களை சமர்ப்பித்திருந்தார் மகிந்த ராஜபக்ச.

ஜேவிபி இது குறித்து அனைத்துலக விசாரணையைக் கோரப் போவதில்லை.இது ஒரு உள்நாட்டுப் பிரச்சினை.

மாத்தளை மனிதப் புதைகுழிக்குப் பெர்றுப்பானவர்களைத் தண்டிப்பதற்கு எற்றவாறு சிறிலங்காவின் சட்டங்கள் கடுமையாகவே உள்ளன.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment