Monday, April 1

பெபிலியான தாக்குதல் : மூன்று பிக்குகளை தேடுகிறது மிரிஹான பொலிஸ்

பெபிலியான பெஷன் பக் நிறுவனம் மீதான தாக்குதல் தொடர்பில் மூன்று பிக்குகள் உள்ளிட்ட மேலும் அறுவரை கைது செய்வது தொடர்பில் மிரிஹான குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை தொடர்ந்துவருகின்றனர்.
 
கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள ஆதாரங்களை ஆராய்ந்ததன் விளைவாக குறித்த பிக்குகள் உள்ளிட்ட அறுவரையும் துல்லியமாக அடையாளம் கண்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
 
நேற்று முன்தினம் கைது செய்யப்பட அறுவர் தொடர்ந்தும் நாளைவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினமும் குறித்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் அறுவர் கைது செய்யப்பட்டனர்.
 
அவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இதன் மூலம் குறித்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட 12 சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
முன்னதாக நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான ஜி.கே.சந்திரசிறி, தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான கே.சஜித் லக்மால், தெஹிவல-கல்கிஸ்ஸ மாநகர நகர சபை ஊழியரான டப்ளியூ.எச்.லலித் தர்மபிரிய, முச்சக்கரவண்டி சாரதிகளான கே.எச்.எச்.நயனானந்த பிரேமகுமார , சம்மிக்க மற்றும் வேன் சாரதியான கே.பிரசாத் ஜயசாந்த  ஆகிய அறுவரையும் நாளைவரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றின் நீதிபதி திஸ்ஸ விஜேரத்ன உத்தரவிட்டிருந்தார்.
 
இந்நிலையில் கொழும்பு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபரான அனுர சேனா நாயக்கவின் கட்டுப்பாட்டின் கீழ் மிரிஹான விஷேட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இதனடிப்படையில் குறித்த தாக்குதலுடன் சம்பந்தம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு முச்சக்கர வண்டி சாரதியும் குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச்சென்ற தனியார் ஊடகமொன்றின் ஊடகவியலாளரை தாக்கி காயப்படுத்திய விளையாட்டுத்துறை அமைச்சில் சேவையாற்றும் ஒருவரையும் நேற்று முன்தினம்   மிரிகான குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
 
இதனை அடுத்து கண்காணிப்பு கெமெரா பதிவுகளை தொடர்ந்தும் ஆய்வு செய்த மிரிஹான பொலிசார் பிக்குகள் மூவருக்கும் பொதுமக்கள் மூவருக்கும் அதில் தொடர்பிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
 
இதனை அடுத்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இவர்களை கைது செய்வதற்காக மிரிஹான குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான நிமல் கருணாரத்ன தலைமையில் விஷேட போலிஸ் குழுவொன்று  ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment