அரசாங்கத்தால் தமிழர்கள்
ஏமாற்றப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள அடிப்படை வாதம்
கிளர்ந்துள்ளமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தியாவில் பெளத்த பிக்கு மீது
தமிழ் அடிப்படை வாதிகளுடன் இணைந்து முஸ்லிம் அடிப்படைவாதிகளும் தாக்குதல்
நடத்தியுள்ளனர். இது வேதனைக்குரிய விடயமாக அமைந்து விட்டது என்று ஐக்கிய
தேசியக்கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் விசனம் வெளியிட்டார்.
நாடு இன்று அபாயத்தை எதிர்கொண்டிருப்பதற்கு அரசாங்கமே பொறுப்பாகும்.
இந்திய மத்திய அரசுடன் பேசி தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை
நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என்பதுடன் ஜெனிவாவில் முன்
வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் பொய்யெனில் அதனை அரசாங்கம்
நிரூபித்துக்காட்ட வேண்டும் என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துறைமுகங்கள் விமான
நிலைய அபிவிருத்தி அறவீடு பொருளாதார சேவை விதிப்பனவு, மதுவரி மற்றும்
தொலைத்தொடர்பு அறவீடு ஆகிய திருத்தச்சட்ட மூலங்கள் தொடர்பான விவாதத்தில்
கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தயாசிறி எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
இந்தியாவுக்கு ஆன்மீகப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த பெளத்த பிக்கு அங்கு
தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இது ஒரு வேதனைக்குரிய விடயமாகும்.
உண்மையில் இந்த பிக்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு காரணகர்த்தாக்கள்
யார் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். இங்கு முஸ்லிம்களுக்கு ஹலால் என்ற
பிரச்சினை ஒன்று சிங்கள அடிப்படைவாதிகளால் பரப்பப்பட்டுள்ளது. என்னைப்
பொறுத்த வரையில் எந்த அடிப்படை வாதத்தையும் நான் வெறுக்கின்றவன். ஹலால்
பிரச்சினையின் பின்னால் அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இவர்களுடன் பொலிஸாரும் இணைந்துள்ளனர்.
இதேபோன்று தான் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம் என்று
அரசாங்கத்திற்கு கூறுகிறோம். 13 பிளஸ் என்று அரசாங்கம் இந்தியாவுக்கு
கூறியது. 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களுக்கு
தீர்வினைப் பெற்றுத்தரப்போவதாக இந்தியாவிடம் அரசாங்கம் உத்தரவாதம்
அளித்தது. அந்த உத்தரவாதத்துக்கு என்ன நடந்துள்ளது.
ஜெனிவா குறித்த பிரச்சினைகளை எடுத்துக்கூறினால் வேறு கதைகளைத் திசை
திருப்பும் நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றது. பயங்கரவாதம் நிறைவு பெற்றுள்ள
போதிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற தாக்குதல்கள்
மனிதப்படுகொலைகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் இன்னும் தொடர்ந்த வண்ணமே
உள்ளன.
இவ்வாறான செயற்பாடுகள் காரணத்தாலேயே ஜெனிவா வரையில் எமது பிரச்சினைகள்
சென்றிருக்கின்றன. இந்நாட்டில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும்
இழைக்கப்படுகின்ற அநீதிகள் அடிப்படையிலேயே இந்தியாவில் பெளத்த பிக்கு மீது
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தமிழ் அடிப்படை வாதிகள்
மட்டுமல்லாது முஸ்லிம் அடிப்படை வாதிகளும் இணைந்தே நடத்தியுள்ளனர்.
மேலும் ஜெனிவாவில் முன் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை அரசாங்கம்
தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. மறுபுறத்தில் செனல் 4 வுக்கு எதிராக
வழக்கு தொடரப் போவதாக அரசாங்கம் கூறியது. அப்படியென்றால் அந்த வழக்கு எங்கு
தொடரப்பட்டுள்ளது?
ஜெனிவா கூறுவதும் அங்கு முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் பொய்
என்றும் அரசாங்கம் கூறுமேயானால் அதனை அரசாங்கம் நிரூபித்துக் காட்ட
வேண்டும். எமது நாடு பாரிய அழிவினை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இதற்கெல்லாம் பதிலளிப்பது யார்?
எனவே அரசாங்கம் சுமுகமான அணுகு முறைகளைக் கையாள வேண்டும். மேலும் இந்திய
மத்திய அரசுடன் பேச்சுக்களை நடத்தி தமிழ் மக்களுக்கு இருக்கின்ற
பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்
என்றார்.
No comments:
Post a Comment