Thursday, March 28

அம்பாறையில் பாடசாலைகளை நோக்கி படையெடுத்த பெற்றோர்கள் (படங்கள்)


அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களை வற்புறுத்தி, அடாத்தாக 'தயட்ட கிருள்ள' காண்காட்சிக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் இன்று வியாழக்கிழமை காலை ராணுவத்தினர் ஈடுபட்டதையடுத்து பாடசாலைகளில் இன்று 28-03-2013 குழப்பமானதொரு சூழ்நிலை காணப்பட்டது. 
அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களிலுள்ள முக்கிய சில பாடசாலைகளுக்கு இன்று காலை சென்ற ராணுவத்தினர் - அப்பாடசாலை மாணவர்களை அம்பாறையில் இடம்பெறும் 'தயட்ட கிருள்ள' காண்காட்சிக்கு அழைத்துச் செல்லப் போவதாக அதிபர்களிடம் கூறியுள்ளனர். 
ஆனாலும், பெற்றோர்களின் அனுமதியின்றி மாணவர்களை அவ்வாறு அனுப்பி வைக்க முடியாது என்று குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் கூறியதாகத் தெரியவருகிறது.
இந் நிலையில், தமது பிள்ளைகளை 'தயட்ட கிருள்ள' காண்காட்சிக்கு ராணுவத்தினர் அடாத்தாக அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளதை அறிந்த பெற்றோர்கள் - உடனடியாக பாடசாலைகளுக்குச் சென்று, தமது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். 
இதனால், இப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் வீதிகளில் - பெற்றோர் அங்குமிங்கும் பதட்டத்துடன் ஓடித் திரிந்ததைக் காணக்கிடைத்தது. 
ராணுவத்தினர் இவ்வாறு மாணவர்களை அச்சுறுத்தி 'தயட்ட கிருள்ள' கண்காட்சிக்கு அழைத்துச் செல்லவுள்ளதை அறிந்த – அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசத்தினைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலைகளின் பெற்றோர்களும் - தமது பிள்ளைகளை பாடசாலைகளிலிருந்து அழைத்துச் சென்றனர். 
அம்பாறையில் நடைபெற்று வரும் 'தயட்ட கிருள்ள' எனும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் கலந்து கொள்வதை முஸ்லிம்கள் தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால், இக் காண்காட்சி எதிர்பார்க்கப்பட்ட வகையில் வெற்றியளிக்கவில்லை என்றும் தெரியவருகிறது.  

No comments:

Post a Comment