Tuesday, March 5

அரசுக்கு ஆதரவளிப்பதன் மூலமே இனவாதிகளை கட்டுப்படுத்த முடியும் – பஷீர் சேகுதாவூத் -அமைச்சுப்பதவிக்கான செஞ்சோற்றுக்கடன்

Basheer Segu Dawood‘பொது பல சேனாவின் நடவடிக்கையினால் அச்சப்படவேண்டியதும் கலவரப்பட வேண்டியதும் முஸ்லிம்களோ தமிழர்களோ அல்ல. ஆளும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிதான்.
சிங்கள முற்போக்கு சக்திகள், பெரும்பான்மையான சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் இந்த அரசுக்கு ஆதரவைத் தெரிவிப்பதன் மூலம்தான் சிறுபான்மை மக்களுக்கெதிராகக் கூக்குரலிடுகின்ற, கல்லெறிகின்ற, காடைத்தனம் புரிகின்ற,  மத வழிபாடுகளில் தலையீடு செய்கின்ற சிறிய சிங்களப் பெருந்தேசிய வாத சக்திகளை நாங்கள் கீழ்ப்படிய வைக்க முடியும்.’ இவ்வாறு உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் அவர்கள் கூறினார்.

ஏறாவூர் நகர சபையின் சகல வசதிகளும் கொண்ட நகரசபைக் கட்டிடத்துக்காக நேற்று 04.03.2013 அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தேசத்திற்கு மகுடம் மற்றும் புறநெகும அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுமார் நான்கு கோடி ரூபா செலவில் இந்த சகல வசதிகளும் கொண்ட மாடிக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட விருக்கின்றது.
அங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து தொடர்ந்து உரை நிகழ்த்திய அமைச்சர் பஷீர் சேகுதாவூத் ‘இது ஒரு அரசியல் திருப்பம் நிறைந்த நிகழ்வு, கடந்த பல தசாப்த காலங்களாக ஏட்டிக்குப் போட்டியாக எதிரும் புதிருமாக சமாந்தரமான பாதைகள் போன்று என்றுமே சந்திக்க முடியாததாய் இருந்த இந்த ஊரின் அரசியல் தலைமைகள் ஒரு மேடையில் வந்தமர்ந்திருக்கின்ற இரண்டாவது தருணமிது. இன்று தேசிய ரீதியான கூட்டு முன்னணியின் அடிப்படையிலே நாங்கள் இணைந்திருக்கின்றோம்.
பொதுஜன ஐக்கிய முன்னணி என்கின்ற ஒரு கூட்டிலே நாங்கள் இணைந்திருக்கின்றோம். இந்தக் கூட்டு முன்னணி அரசியல் என்பது பல அரசியல்வாதிகளை ஒன்றிணைத்திருக்கின்றது. நீண்ட நெடுங்காலம் எதிரும் புதிருமாக இயங்கி வந்த அரசியல் வாதிகளை ஒரே குடையின் கீழ் இந்தக் கூட்டு முன்னணி இணைத்திருக்கின்றது.
இந்த இணைவு மட்டும் போதாது இதற்கும் மேலதிகமாக உரையாட வேண்டும். இந்த ஊரில் மாத்திரமல்ல இந்த நாட்டின் எல்லா சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்படுகின்ற காலமிது.
ஏறாவூரின் ஒன்றிணைந்த அரசியல் பலத்திற்கு உரமூட்ட சகோதரர் அலிஸாஹிர் மௌலானா அவர்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றார். இது இந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற ஒட்டு மொத்தமான எல்லா சமூகத்தினதும் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த மாகாண சபைத் தேர்தலிலும் இந்த இயற்கையான ஒன்றுபடுதலின் அடிப்படையில் செயற்படுவோம் என்கின்ற சூழ் நிலை இருந்தபோதிலும் கூட செயற்கையான சில செயல்பாடுகளின் காரணமாக நம்மால் இணைந்து செயல்பட முடியாமல் போய்விட்டிருந்தது.
அடிமட்ட ஆதரவாளர்களுக்கிடையில் சில சலசலப்புக்கள் வருகின்ற போதிலும் கூட மேல் மட்டத்திலே இருக்கின்ற நாங்கள் ஊரின் ஒற்றுமை என்கின்ற விசயத்திலே உறுதியாக இருக்கின்றோம்.
ஏறாவூரின் தந்தை எங்களுடைய அலிஸாஹிர் மௌலானா மூலம் ஏறாவூர் நகரத்துக்கான பெருமை கிடைத்திருக்கின்றது.
தேசிய ரீதியாக செயற்படுகின்ற ஒரு ஆணை கட்சி மூலமாகவும் ஊர் மூலமாகவும் மாவட்டம் மூலமாகவும் எனக்குக் கிடைத்திருக்கின்றது.
அரசியல் ரீதியாக எல்லோருக்கும் பக்குவம் வரவேண்டும். இந்த ஊர் இனிமேல் பிளவு பட்டு நிற்க முடியாது. எங்களுடைய சமூகங்கள் இனிப்பிரிந்து நிற்க முடியாது. சமூகத்திற்குள் முழுமையான ஒற்றுமை வர வேண்டும். நாட்டுக்குள் சிங்களவர்கள், தமிழர்கள். முஸ்லிம்கள் என அனைவரும் முழுமையான ஒற்றுமைக்குள் நுழைய வேண்டும். அப்பொழுதுதான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும்.
இலங்கையில் இருக்கின்ற எல்லா முஸ்லிம் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று நான் கடந்த காலங்களில் கடுமையாகப் பாடுபட்டேன். ஏனென்றால் இனிமேல் வருகின்ற அரசியல் என்பது ஒரு வித்தியாசமானதாக இருக்கும். நெருக்கடிகள் நிறைந்த இந்தக் காலகட்டத்திலே நாங்கள் எங்களுடைய பலத்தை மாத்திரமல்ல ஏனைய சமூகங்களோடு புரிந்துணர்வை வளர்ப்பதன் மூலம் அவர்களுக்குள் நாங்கள் எங்களது நம்பகத் தன்மையை நிலைநிறுத்துவதன் மூலம் ஏனைய சமூகங்கள் எங்களைப்பற்றி அச்சப்படாதிருக்கிக்கின்ற அடிப்படையிலே நாங்கள் செயற்படுகின்ற போதுதான் எதிர்காலத்திலே இந்த நாட்டிலே மேலோங்கி வருகின்ற பெருந்தேசிய வாத சக்திகளின் சவால்களை முறியடித்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற அந்த ஒரே நிழலின் கீழ் வாழ்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
இல்லாது போனால் எப்போதுமே சச்சரவுகள் நிலவுகின்ற ஒரு இடமாக எமது நாடு மாறி விடும் ஆபத்து இருக்கின்றது.
இந்த விசயத்திலே ஜனாதிபதியவர்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றார். சிங்கள மக்களுக்குள் மிகப் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற ஒரு அரசியல் தலைவரினால்தான் சிறுபான்மை மக்களுக்கும் சரியான உரிமையைத் தர முடியும். அவர்களைப் பாதுகாக்கவும் முடியும்.
இன்று பொது பல சேனா பற்றிய அச்ச உணர்வு முஸ்லிம்கள் மத்தியிலே ஏற்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் அசைக்க முடியாத ஒற்றுமையில் ஏனைய சமூகங்களுடனான இறுக்கமான பிணைப்பில் இருந்தால் நிச்சயமாக இந்தச் சிறிய அமைப்புக்களினுடைய எதிர்ப்புக்களை இலகுவாக முறியடிக்க முடியும்.
அதற்கு ஒரு முன்முயற்சியாக இந்த மேடையிலே தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற பிரதிநிதிகள் ஒன்றிணைந்திருக்கின்றார்கள். இந்த ஒற்றுமை சிங்களவர்களையும் இணைத்துக் கொண்டு வியாபிக்க வேண்டும். அதன் மூலம் ஒரு புதிய சகாப்தம் உருவாக வேண்டும்.
எங்கிருந்தோ ஒரு சக்தி இந்த நாட்டிலே பிரச்சினையை உருவாக்க கங்கணம் கட்டி நிற்கின்றது. இனங்களுக்கிடையில் இருக்கின்ற அமைதியை அவர்கள் சீர் குலைக்க எண்ணுகிறார்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்பு புதிய அரசு மிகவும் உறுதியான ஒன்றாக மாறிவிட்டது.
இந்த அரசு எந்த வெளிநாட்டுச் சக்திகளின் கோரிக்கைக்கும் நாட்டு மக்களின் உரிமையை தாரை வார்க்கும் நிலைமையில் இல்லை. பல வெளிநாட்டு சக்திகள் தங்களுடைய கோரிக்கைக்கு இலங்கை அரசு இணங்கி நடக்க வேண்டும் என்று விரும்புகின்றது. தாங்கள் சுட்டு விரல் அசைத்தால் அதற்கு இந்த நாடும் நாட்டுத் தலைமையும் ஆட்டங்காண வேண்டும் என்று வெளிநாட்டுச் சக்திகள் நினைக்கின்றன. பூகோள ரீதியாக தங்களுடைய நலன் சார்ந்து இலங்கை செயற்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள்.
சரத் பொன்சேகா அவர்களைக் கொண்டு வந்து ஜனாதிபதித் தேர்தலிலே நிறுத்தி வெல்ல வைக்க வேண்டும் என்று அவர்கள் முயற்சித்தார்கள். அது தோல்வி கண்டு விட்டது. முன்னாள் பிரதம நீதியரசர் அவர்களை வைத்து இந்த நாட்டிலே நீதித்துறை ரீதியாக அரசைக் கவிழ்க்க முயற்சித்து அது முடியாமல் போய் விட்டது.
ஆனாலும் மீண்டும் இலங்கையின் சிறுபான்மை மக்களிலே முக்கியமான ஒரு தரப்பாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் சமூகங்களுக்கிடையில் ஒரு பதட்ட நிலையை உருவாக்கி தாங்கள் நினைத்த காரியத்தைச் சாதித்து விடலாம் என்று அவர்கள் சிந்திக்கின்றார்கள்.
பலம் பொருந்திய சிங்கள பௌத்த செயற்பாட்டைச் செய்கின்ற ஒரு அமைப்பு முஸ்லிம்களுக்கெதிராகச் சிறிய சிறிய நடவடிக்கைகளைச் செய்வதன் மூலம் மத ரீதியான விடயங்களில் தலையீடுகளைச் செய்வதன் மூலம் முஸ்லிம்களின் பொருளாதாரங்களை இலக்கு வைத்து அழிக்க முற்படுவதன் மூலம் முஸ்லிம்களுடைய நாளாந்த வாழ்க்கையில் தலையீடுகளைச் செய்வதன் மூலம் அவர்கள் முஸ்லிம்களுக்குள் ஒரு பிரச்சினையை நிறுவினால் முஸ்லிம் சமூகம் இதற்கு எவ்வாறு பிரதி பலிப்பைச் செலுத்த விரும்புகிறது என்று பார்க்க விரும்புகின்றார்கள்.
அதன் மூலம் இன்று இலங்கை அரசுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற ஆதரவுத் தளத்தைக் குறையச் செய்ய வேண்டும் அதுவும் தவறினால் இன்று அரசோடு இணைந்துள்ள முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவை இல்லாமற் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துத்தான் அவர்கள் கல்லெறிகின்றார்கள்.
ஆட்சி மாற்றத்தை விரும்புகின்ற சக்திகள் இந்த நாட்டிலே புதியதொரு பிரச்சினையின் அலையைத் தோற்றுவிப்பதன் மூலம் இந்த அரசுக்கு இருக்கின்ற மக்கள் ஆதரவைக் குறைத்து அரசைக் கவிழ்க்கும் சதிநாச சூழ்ச்சி வலை பின்னப்படுகின்றது.
முஸ்லிம்கள் தமிழர்கள் யாரும் இந்த அரசாங்கத்தோடு இல்லை என்று காட்ட அவர்கள் முனைகின்றார்கள்.
அரசு சிங்கள ஒற்றைத் தலைமைத்துவமாக மாறக் கூடிய ஆபத்திற்கு சிறுபான்மை இனங்கள் விலகி இடம் விட்டு விட்டால் அது பெரும் ஆபத்தைத் தோற்றுவிக்கும் என்பதை சிறுபான்மைச் சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அடையப்பட முடியாத இலக்குகளை நோக்கித் தள்ளிக் கொண்டு  நாங்கள் எதையும் அடைந்து கொள்ள முடியாது. இனிமேல் புதிய வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும். புதிதாக ஏற்படுகின்ற சூழ் நிலைகளை கச்சிதமாகக் கையாளுகின்ற உத்திகளை நாங்கள் வகுக்க வேண்டும்.
சிங்கள அரசர்களுடைய காலந்தொட்டு முஸ்லிம்கள் இலங்கையில் சிங்கள ஆளுந்தரப்புடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு நிர்வாகத்தில் பங்கெடுத்துத்தான் வந்திருக்கின்றார்கள்.
தங்களது நலன்களையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தினார்கள். இதற்கு வரலாறு இருக்கின்றது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலே சுதந்திரம் கிடைத்த காலந்தொட்டு இன்று வரைக்கும் சிங்கள மக்களுக்குள் இருக்கின்ற ஆளுந்தரப்பை எதிர்த்து அரசியல் செய்வதன் மூலம் மாத்திரம்தான் தமிழ் மக்களுடைய நலன்களைக் காத்துக் கொண்டதாக அவர்கள் பேசிக்கொள்கின்றார்கள்.
சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்திலிருந்து வந்த தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி இடையிலே வந்த தமிழ் வன்முறை அரசியலைச் செய்தவர்கள், இப்பொழுதுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று எவராக இருந்தாலும் இந்த நாட்டிலே இருக்கின்ற அரசாங்கங்களுக்கு எதிராகவே செயற்பட்டதன் மூலம் தமிழ் மக்களுடைய நலன் ஓரளவு பாதுகாக்கப்பட்ட போதிலும் கூட இறுதியிலே ஒட்டு மொத்தமாக அந்தத் தமிழ் தேசியம் என்பது மிகப்பலவீனமாக ஆகிவிட்டது.
முஸ்லிம்கள் அவ்வாறு பலவீனமடையவில்லை. இதுவரை செய்யப்பட்ட இரண்டு ரகமான அரசியலின் விளைவுகளைப்பற்றித்தான் இங்கு நான் சிலாகிக்க விரும்புகின்றேன்.
நானும் ஒரு குறிப்பிட்ட காலம் இந்த தமிழ் மக்களுடைய வன்முறை கலந்த அரசியல் போராட்டத்திலே பங்கு பற்றியவன் பங்காளியாக இருந்தவன் அதனால் எனக்கு இதைச் சொல்ல முழு உரிமையும் இருக்கின்றது.
முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்தும் அரேபியத் தீபகற்பத்திலிருந்தும் மலாயாவிலிருந்தும் இங்கு வந்து குடியேறிய போது அவர்கள் முதலில் போர்ச் சேர்ந்த இடம் சிங்கள மன்னர்களுடைய அரண்மனைகளாக இருந்திருக்கின்றது.
அன்று அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி  நல்லுறவை ஏற்படுத்தி பண்டமாற்றுப் பொருளாதாரத்தைக் கைக்கொண்டு சர்வதேசத்திலிருந்து நாட்டுக்குப் பணத்தைக் கொண்டு வந்தததோடு சகவாழ்வும் வாழ்ந்திருக்கின்றார்கள்.
உலகத்திற்கு இலங்கையை அறிமுகப்படுத்தியவர்கள் இங்கு வாழ்ந்த வர்த்தக முஸ்லிம்கள்தான். இலங்கைப் பொருட்களுக்கு உலக சந்தையிலே ஒரு இடத்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் இலங்கை முஸ்லிம்களேயன்றி வேறு யாருமல்ல.
நாட்டுக்காகத் தங்களை அர்ப்பணித்த இலங்கை முஸ்லிம்கள் வெளிநாட்டுப்படைகளினால் இலக்கு வைத்துத் தாக்கப்பட்ட போது அன்று சிங்கள அரசர்கள் முஸ்லிம்களைப் பாதுகாத்தார்கள்.
இது வரலாறு. இந்த வரலாறுகளை இன்று பொய்யுரைத்துக் கொண்டிருக்கின்ற இந்த பொது பல சேனா கடும் போக்காளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு எவரையும் காட்டிக் கொடுத்ததல்ல. பௌத்த ஹிந்து கிறிஸ்தவ மக்களோடு சிரித்தபடி வாழ்ந்து இன்ப துன்பங்களில் பங்கு கொண்டதுதான் இந்த நாட்டு முஸ்லிம்களின் வரலாறு.
இந்த நாட்டிலே வாழ்கின்ற எல்லா இன மக்களுக்கும் வெளிநாடுகள் அல்ல இந்த நாட்டு அரசே பாதுகாப்பளிக்க வேண்டும். என்றார் அவர்.
நன்றி : kattankudi info

No comments:

Post a Comment