(ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவு தலைவரும், பிரதி அமைச்சருமான பைசர் முஸ்தபாவுடனான நேர்காணல்)
கேள்வி : சிங்கள முஸ்லிம் இனங்களிடையே
பிளவை ஏற்படுத்த அண்மைக்காலமாக சில முயற்சிகள் மேற்
கொள்ளப்படுகின்றதே. இது தொடர்பில் எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது?
பதில்: ஆரம்ப காலம் முதலே முஸ்லிம்கள்
தாய் நாட்டிற்காக பாடுபட்டு உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.
ஒல்லாந்தர், போர்த்துக்கேயர்,
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில்
கூட முஸ்லிம்கள் நாட்டுக்காக போராடிய வரலாறை யாராலும் மறுக்க முடியாது
தமிழ் மக்களில் ஒரு தரப்பினர் நாட்டைத் துண்டாட செயற்பட்ட போதும் முஸ்லிம்கள்
ஒரு போதும் நாட்டை பிரிக்க முனைந்தது கிடையாது. யுத்த காலத்திலும்
முஸ்லிம்கள் நாட்டிற்காக தம்மை அர்ப்பணித்தார்கள். இலங்கையில் சிங்கள மக்கள்
பெரும்பான்மையாக இருந்தாலும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும்
முஸ்லிம்களுக்கும் இங்கு சம உரிமை உள்ளது.
எமது உடம்பிலும் சிங்கள இரத்தம்
ஓடுகிறது. வர்த்தகத்திற்காக வந்த அரபிகள் சிங்களப் பெண்களைத் தான்
மணமுடித்தார்கள். ஆனால் நீண்டகாலமாக நீடிக்கும் சிங்கள முஸ்லிம்
உறவை குலைக்க சிலர் முயற்சி செய்கின்றனர். இதற்கு அரசாங்கமோ நாமோ
ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இதன் பின்னணியில் சர்வதேச சதியும்
இருக்கிறது. தற்பொழுது எழுந் துள்ள பிரச்சினை குறித்து ஜனாதிபதி நியமித்த அமைச்சரவை
உப குழு ஆராய்ந்து வருகிறது.
கேள்வி: ஹலால் விவகாரத்திற்கு தீர்வாக
பொருட்களில் ஹலால் இலச்சினை பொறிப்பதை நிறுத்துவதாக உலமாசபை
அறிவித்துள்ளது. இதன்மூலம் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு
தீர்வு ஏற்படுமா?
முஸ்லிம்களுக்கு ஹலாலான உணவுகள்
கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை
ஆரம்பிக்கப்பட்டது. பெளத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள தாய்வானில் கூட
ஹலால் இலச்சினை உள்ள பொருட்களே இறக்குமதி செய்யப்படுகிறது. வர்த்தக நோக்கிலே
அவ்வாறு செய்கின்றனர். இங்கும் அவ்வாறே வியாபாரிகள் ஹலால் இலச்சினையை
பொறித்து தமது பொருட்களை விற்கின்றனர். இது தொடர்பில் பிரச்சினை தலைதூக்கியதாலே
இன ஒருமைப்பாட்டிற்காக ஹலால் இலச்சினையை கைவிட உலமாசபை
தீர்மானித்தது. இது உலமா சபை மேற்கொண்ட தூரதிருஷ்டியான புத்தி சாதுர்யமான
முடிவாகும். இந்த முடிவை நடுநிலையான பிக்குமாரும் வர்த்தக சம்மேளனமும்
ஏற்றுள்ளது. இந்த நடவடிக்கையினூடாக பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். தாம்
விநியோகித்த ஹலால் இலச்சினையை தாமே உலமா சபை மீளப்பெற்றது தவறில்லை.
கேள்வி: ஆனால் சில முஸ்லிம்
தலைவர்களும் சில அமைப்புகளும் விமர்சித்துள்ளனவே?
பதில்: யுத்த காலத்தில் யாராவது ஹலால்
குறித்து பேசினார்களா? இனங்களிடையே பிளவை ஏற்படுத்தவே இந்¡ப் பிரச்சினை
தற்பொழுது பூதகரமாக்கப்பட்டுள்ளது. இனவாதம் பரப்புபவர்களும் வங்குரோத்து
அரசியல்வாதிகளும் தான் அறிக்கை விட்டு இல்லாத பிரச்சினைகளை
உருவாக்குகின்றனர். ஹலால் விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் லாபம்
பெறவே சிலர் முயல்கின்றனர். யார் என்ன கூறினாலும் உலமா சபை எடுத்த நடவடிக்கை
மிகச்சரியானதே. அந்த அமைப்பு தவறு ஏதும் செய்யவில்லை உலமா சபையின்
நடவடிக்கையினால் அது தொடர்பில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த பதிலடியாக
அமைந்துள்ளது. அமைச்சரவை உபகுழுவிலும் அமைச்சர் பெளசி தலைமையில் நடந்த
கூட்டத்திலும் இணக்கம் எட்டப்பட்ட பின்னரே உலமா சபை இதனை அறிவித்தது.
ஆரம்பத்திலேயே ஹலால் விடயம் குறித்து
மகாசங்கத்தினருக்கு அறிவூட்டிருந்தால் இந்த விடயம் இவ்வளவு தூரம்
பூதகரமாகியிருக்காது.
கேள்வி: ஹலால் அடங்கலாக தற்போது
எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கமும் முஸ்லிம் தலைவர்களும்
மெளனம் சாதித்ததாக குற்றஞ்சாட்டப்படுவது குறித்து..?
பதில்: சில தரப்பினர் கூறும்
குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதில் அறிக்கை விடவில்லை என சிலர் எம்மைச்
சாடுகின்றனர். அறிக்கை விட்டு காலங்கடத்தாமல் நாம் ஜனாதிபதி, அமைச்சர் பசில்
ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோட்டபயராஜபக்ஷ ஆகியோருடன் இது
குறித்து காத்திரமான பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். இதற்காக ஜனாதிபதி
அமைச்சரவை உபகுழுவொன்றையும் நியமித்து ஆராய்ந்து வருகிறார். ஜனாதிபதி
குறித்தும் பாதுகாப்பு செயலாளர் குறித்தும் எனக்கு பூரண நம்பிக்கை உள்ளது.
முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்பட அவர்கள் இடமளிக்க மாட்டார்கள். நாட்டின் இன
ஒருமைப்பாட்டை உருவாக்க அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முஸ்லிம்கள் தற்போதைய சூழ்நிலையில்
தூரநோக்குடன் செயற்படவேண்டும். நாம் விட்டுக்கொடுத்து செயற்பட வேண்டிய அதே
வேளை எமது உரிமைகளை ஒரு போதும் விட்டுக் கொடுக்கக்கூடாது. முஸ்லிம்
சமூகத்தின் உரிமைகளைவிட்டுக்கொடுக்க நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன்.
அதற்காக எப்பொழுதும் போராடுவேன். முஸ்லிம் சமூகம் சுயகெளரவத்துடன்
தலைநிமிர்ந்தும் வாழ தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்த
அரசியல் லாபம் தேட வேண்டாமென கோருகிறோம். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி
குளிர்காய முயலும் அற்ப முயற்சிகளை கைவிடுமாறு வங்குரோத்து
அரசியல்வாதிகளை கேட்கிறேன். சுதந்திரக்கட்சி சிரேஷ்ட முஸ்லிம்
தலைவரான ஏ.எச்.எம். பெளசி ஹலால் விவகாரத்தில் முன்னின்று செயற்பட்டார். இந்த
விடயத்தில் தலைமைத்துவம் வழங்கி முஸ்லிம் சமூகத்திற்காக பெரும்பங்காற்றினார்.
அவர் போன்ற தலைவர்கள் எமது சமூகத்திற்கு மிகவும் முக்கியமாகும்.
கேள்வி: ஹலால் விடயத்துக்கு அடுத்ததாக
முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் குறித்தும் பிரச்சினை எழுப்பப்போவதாக
சிலர் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் என்ன கூற
விரும்புகிaர்கள்?
பதில்: ‘ஹிஜாப்’ அணிவது எமது
பெண்களின் உரிமையாகும். மினி ஸ்கேர்ட் அணிந்து முழு உடலையும் பிற
ஆண்களுக்கு காட்டும் பெண்கள்பற்றி இவர்கள் எதுவும் பேசுவதில்லை. உடலை
திறந்து காட்டிச் செல்ல உரிமை இருப்பது போன்றே உடலை மறைத்துச்
செல்லவும் பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதனை யாராலும் தடுக்க முடியாது. இது
அரசியலமைப்பினூடக வழங்கப்பட்ட மனித உரிமைகளில் ஒன்றாகும். முஸ்லிம் பெண்களின்
இந்த உரிமையில் கைவைக்க யாருக்கும் இடமளிக்க மாட்டோம். முஸ்லிம்
சமூகத்தின் உரிமைகளை பறிக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. அரசியல் பேதமின்றி
இதற்கு எதிராக போராடுவோம். இந்த சவாலை முகம் கொடுக்க தயாராக உள்ளேன்.
முஸ்லிம்களின் உரிமைகளை நசுக்க ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும்
ஒருபோதும் இடமாளிக்க மாட்டார்கள்.
கேள்வி : முஸ்லிம்களுக்கு எதிராக
ஆங்காங்கே சிறுசிறு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் முஸ்லிம்கள்
அச்சத்துடன் இருப்பதாகவும் கூறப்படுவது குறித்து...?
பதில்: சில சம்பவங்கள் பெரிதுபடுத்தி
கூறப்பட்டாலும் முஸ்லிம்களுக்கு எதிராக எத்தகைய சம்பவம்
இடம்பெற்றாலும் அதனை சாதாரணமாக ஒதுக்கமாட்டோம். இது தொடர்பில் சட்டம்
ஒழுங்கு செயற்படுத்தப்பட வேண்டும். பொய்யான குற்றச்சாட்டுகள் வரவே செய்கின்றன.
உண்மையில் ஏதும் சம்பவம் நடந்திருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க
பின்நிற்க மாட்டோம். எங்கு எத்தகைய சம்பவம் நடத்தாலும் அது குறித்து
எனக்கு அறிவித்தால் உயரதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பேன். தமது
மதத்தை முழுமையாக பின்பற்ற உள்ள உரிமை பாதுகாக்கப்படும். எமது உரிமையை
நசுக்க யாராவது முயன்றால் அதற்கு எதிராக செயற்படுவோம். சிறிய சம்பவமாக
இருந்தாலும் எமக்கு அறிவித்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம்.
சிங்கள - முஸ்லிம் மக்களிடையே சச்சரவு ஏற்பட இந்த அரசாங்கமோ ஜனாதிபதியோ
ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
கேள்வி: முஸ்லிம்கள் தொடர்பான
விவகாரம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கட்டுப்பட்டுள்ளதாக
சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது பற்றி..”
பதில்: இது எமது நாட்டிற்குள்
நடக்கும் விடயம் அதனை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லத் தேவையில்லை. அதனை எமக்கு
தீர்க்க முடியும் இந்த விடயம் ஜெனீவாவுக்குகொண்டு செல்லப்பட்டால்
இரு சமூகங்களுக்குமிடையிலான பிளவு அதிகரிக்கும்.
கேள்வி: மத்திய கொழும்பு இணை
அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ர்கள்? இந்த சவாலை உங்களால் சமாளிக்க
முடியுமா?
பதில்: கண்டியில் இ.தொ.க.வில்
போட்டியிட்டு வென்றவன் நான் என்னால் வெல்ல முடியாது என பலர் ஆருடம் கூறினார்கள்.
நான் எப்பொழுதும் சவால்களுக்கு முகம்கொடுக்கவே விரும்புகிறேன்.
ஜனாதிபதி தந்த இந்த சவாலையும் ஏற்று மத்திய கொழும்பை வெற்றியீட்ட பாடுபடுவேன்.
வெற்றியை மட்டுமன்றி தோல்வியையும் ஏற்க நான் அஞ்சவில்லை.
எனது இணை அமைப்பாளராக முஸ்லிம்
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி செயற்படுகிறார். அவருடன் இணைந்து
செயற்பட நான் எப்பொழுதும் தயாராக உள்ளேன. அவருடன் பணிபுரிவதில் எந்த
பிரச்சினையும் கிடையாது அவர் அனுபவமுள்ள சிரேஷ்ட முஸ்லிம் தலைவர்.
அவருடன் சகோதரத்துவத்துடன் ஒன்றாக செயற்பட்டு மத்திய கொழும்பை வெல்ல
பாடுபடுவேன். அவர் எமது முஸ்லிம் தலைவர். அவருடன் இணைந்து நீண்ட பயணம் செல்ல
தயாராக இருக்கிறேன். எனக்கு அவரின் அனுபவம் மிகவும் உதவியாக இருக்கும்
தேசிய ஒருமைப்பாட்டிற்கு அவர் செய்த சேவைகள் மிக முக்கியமானவை. Thinaharan
No comments:
Post a Comment