Saturday, March 30

நகத்தினால் கிள்ளி எறிய வேண்டியதை கோடரியினால் கொத்த வேண்டியுள்ளது ; ஹக்கீம்


நகத்தினால் கிள்ளி எறிய வேண்டியதை கோடரியினால் கொத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. பெளத்த சாசனத்தை பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு ஒரு குழுவினர் குரோதத்தையும், வெறுப்பையும் மக்கள் மத்தியில் வளர்க்கின்றனர் என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டி, ஜம்புகஸ்பிட்டியவில் மூனமலை போதிருக்காராமை விகாரையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அறநெறிப் பாடசாலை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொணடு உரையாற்றியபோதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.


அமைச்சர் இங்கு மேலும் கூறுகையில்,

இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த உதவும் பிரதானமான இடம்தான் தஹம்பாசல் என்படும் அறநெறிப் பாடசாலையாகும்.

தற்போது சமயங்களுக்கும் இனங்களுக்கும் இடையில் பிரச்சினைகளைத் தோற்று விக்கும் ஒரு சாரார் வெளிக்கிளம்பியுள்ளனர். இதன் பின்னணியில் பார்க்கும்போது சில வருடங்களுக்கு முன்னர் நாடு அழிவை நோக்கிச் சென்றதை அநேகர் மறந்திருக்கமாட்டார்கள்.

எல்லாச் சமயத்தினரும் தமது சமய கலாசாரங்களை பின்பற்றி ஒழுகுவதற்கான வசதிகளையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
புதிய இனவாதக் குழுக்களின் தோற்றத்தோடு இந்த நாட்டை - அழிவிற்கு இட்டுச் செல்லும் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


நேற்று முன்தினம் இரவு கொழும்புக்கு அண்மையில் பெப்பிலியான என்ற இடத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலையை தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து இரவு முழுவதும் நாடெங்கிலுமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.

வைராக்கியத்தோடும், வெறுப்போடும்; வெறியோடும் இத்தகைய கீழ்த்தரமான காரியங்ககளை செய்கின்றனர்.
நான் சிறுபான்மையினம் ஒன்றைச் சேர்ந்தவனாக இருந்தாலும் கூட இவ்வாறான பெளத்த அறநெறிப் பாடசாலை நிகழ்வுக்கு என்னை அழைத்து கெளரவப் படுத்துகின்றீர்கள்.

இவ்வாறான சூழ்நிலையில்தான் எங்களுக்கு எதிரான முயற்சிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. இன்று அதிகாலையிலேயே நான் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தேன். இவ்வாறான துர்ப்பாக்கிய நிகழ்வுகள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் வியாபித்து விடாமல் தடுக்க வேண்டுமானால் அமைச்சரவையை அவசரமாகக் கூட்டி ஆராயுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

நகத்தினால் கிள்ளி எறிய வேண்டியதை கோடரியினால் கொத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
பெளத்த சாசனத்தை பாதுகாப்பதாகக் குரோதத்தையும், வெறுப்பையும் வளர்ப்பது நாட்டுக்கே சாபக் கேடாகும்

1 comment: