பொதுபலசேனா
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளும், விஷமத்தனமான
பிரசாரங்களும் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. மாறாக நாளுக்கு நாள்
அவர்களின் அட்டகாசங்களும் அட்டூழியங்களும், சட்டவிரோத செயற்பாடுகளும்,
பிரகடனங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன.
முஸ்லிம் சமூகம் இன்று தமக்காக குரல்
கொடுக்க யாரும் இல்லாத நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம்
அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் மௌனித்துப்
போய் உள்ளனர். இவர்களின் காவாலித் தனம் கட்டுக்கடங்காமல் செல்கின்றது.
பொதுபலசேனா
அமைப்பினரை ஜனாதிபதி அண்மையில் சந்தித்து மிக நீண்ட நேரம் பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின் முழுமையான விவரங்கள் எதுவும்
இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இன ஐக்கியத்தையும் சகல இனங்களுக்கும்
சுதந்திரமாக வாழும் உரிமை உள்ளது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி
வலியுறுத்தினார் என்றும் பொதுவான சில தகவல்தான் வெளியாகின. ஆனால் இந்த
சந்திப்பில் பொதுபல சேனாவின் பல கோரிக்கைகளையும் ஜனாதிபதி ஏற்றுக்
கொண்டுள்ளார் என்ற ரீதியில் சில செய்திகள் வெளியாகியுள்ளன. அவை பற்றி எந்த
விவரமும் இல்லை.
ஆனால் இந்த சந்திப்பின் பின் பொதுபல
சேனாவின் செயற்பாடுகள் மேலும் மூர்க்கமடைந்துள்ளன. நாடு முழுவதும் முஸ்லிம்
மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவது
இந்தச் சந்திப் பின் பின்னர் அதிகரித்துள்ளது.
முஸ்லிம்கள்
நாட்டின் பல பகுதிகளில் தமது பூர்விக வாழ்விடங்களை காலி செய்ய வேண்டும்
என்ற அச்சுறுத்தல் இந்தச் சந்திப்பின் பின்னர் அதிகரித்துள்ளது. பொதுபல
சேனாவுக்கு பாதுகாப்பு அமைச்சின் இரகசிய கணக்குகளில் இருந்து பணம்
வழங்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே பகிரங்கமாகக் குற்றம்
சாட்டியுள்ளார். அப்படியாயின் இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி ஏற்றுக் கொண்ட
பொதுபல சேனாவின் கோரிக்கைகள் என்ன? இது முஸ்லிம்கள் மத்தியில் நாட்டின்
தலைமை மீதே நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு இன்னொரு காரணம் அமைச்சரவையில்
சிங்கள தீவிரவாத அமைப்பான ஜாதிக ஹெல உறுமய அமைப்பை பிரதிநிதித்துவம்
செய்யும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்து வருகின்ற கருத்துக்கள்.
அமைச்சரவைக்கான கூட்டுப் பொறுப்பை ஒட்டுமொத்தமாக மீறும் வகையில் பொதுபல
சேனாவின் ஊது குழலாக அவர்கள் கூறும் அதே கருத்துக்களை சம்பிக்க ரணவக்கவும்
தெரிவித்து வருகின்றார். ஆனால் அவர் தொடர்ந்து அமைச்சராகவும் இருந்து
வருகின்றார். அமைச்சரவைக்குள்ளேயும் கூட அவருக்கு இவ்வாறான கருத்துக்களை
வெளியிட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கேள்விப்படுகின்றோம். முஸ்லிம்கள் விடயத்தில் அரசாங்கம் இரட்டை வேடம் போடுகின்றதா என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மகரகமவில் கூடிய
பொதுபல சேனா அமைப்பு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதை அடுத்த மாத இறுதியுடன்
நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளது. இல்லையேல் அந்த
அமைப்பே உத்தியோகப்பற்றற்ற பொலிஸாக மாறி சட்டத்தை தானே கையில் எடுத்துக்
கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக பகிரங்கமாக எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
இது இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்துக்கு
விடுக்கப்பட்ட எச்சரிக்கையோ அல்லது அச்சுறுத்தலோ அல்ல. இது இந்த நாட்டின்
சட்ட ஒழுங்கிற்கும், பாதுகாப்புக்கும், பொலிஸ் மற்றும் பாதுகாப்புத்
துறைக்கும் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க சவாலாகும்.
இன்றைய
நவீன உலகில் ஜனநாயகத்தையும் சட்டம் ஒழுங்கையும் மதிக்கின்ற ஒரு சிவில்
சமூக அமப்புக்குள், எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் கூட
இப்படி ஒரு பயங்கர அச்சுறுத்தலை பகிரங்கமாக விடுத்துள்ளதாக சரித்திரமே
இல்லை. இதிலிருந்து இவர்கள் எந்தளவு நாகரிகமற்றவர்கள் என்பது
தெளிவாகின்றது. இந்த நாகரிகமற்ற காட்டுமிராண்டிக் கும்பலுக்கு அரசும்
பாதுகாப்புத் தரப்பும் கூறும் பதில் என்ன?
இந்த காட்டுமிராண்டிகளுக்கு இனிமேல் ஹலால்
பற்றி விளக்கமளிப்பதில் எந்தப் பலனும் இல்லை. அவர்களுடன் பேசுவதும்
அத்தமற்றது. இவர்களின் காலக்கெடு எமக்குத் தேவையில்லை. உடனடியாக அமுலுக்கு
வரும் வகையில் ஜம்மிய்யத்துல் உலமா இந்த நாட்டில் முஸ்லிம் அற்ற
நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கின்ற ஹலால் சான்றிதழ்களை இரத்துச் செய்ய
வேண்டும். இந்த நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவற்றை அவர்கள்
பகிரங்கப்படுத்த வேண்டும. உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகங்களில இந்த
நிறுவனங்களின் பெயர் விவரங்ளை விளம்பரப்படுத்த வேண்டும். முஸ்லிம் அல்லாத
நிறுவனங்கள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்தவும் அவற்றால் இலாபம் ஈட்டவும்
ஹலால் சான்றிதழ் எந்தளவுக்கு அவசியமானது என்பதை இவர்களாகவே புரிந்து கொள்ள
இது வழிவகுக்கும்.
இன்று முஸ்லிம் சமூகத்தின் ஏகோபித்த
எதிர்ப்பார்ப்பும் இதுவாகவே உள்ளது. எனவே இதற்கு மேல் ஒரு நாள் கூட
தாமதிக்காமல் ஜம்மிய்யத்தல் உலமா முஸ்லிம் அல்லாத நிறுவனங்களின் ஹலால்
சான்றிதழ்களை இரத்துச் செய்து இனிமேல் அவை வழங்கப்படுவதையும் உடனடியாக
இடைநிறுத்த வேண்டும். முஸ்லிம் சமூகத்துக்கு கடமையாக்கப்பட்டுள்ள ஹலால்
உணவை சான்றிதழைப் பார்த்துதான் அவர்கள் தெரிவு செய்ய வேண்டும் என்ற
தேவையில்லை. அதை எப்படி தீர்மானிப்பது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க ஜம்மிய்யத்துல்
உலமா கடமைப்பட்டுள்ளது. அதை அவர்கள் உரிய முறையில் நிறைவேற்றுவார்கள் என்று
நாம் நம்புகின்றோம்.
ஆஸாத் சாலி
தலைவர்
முஸ்லிம் தமிழ் தேசிய கூட்டணி
No comments:
Post a Comment