Saturday, June 23

நிலமீட்புப் போரில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் கூட்டமைப்புடன் குதிக்கிறது! தலைமை அதிரடி முடிவு



வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வரும் சாத்வீக வழியிலான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிரடியான தீர்மானமொன்றை எடுத்துள்ளது என மிகவும் நம்பகரமாகத் தெரிகின்றது.
வடக்கைப் போன்று தற்போது கிழக்கிலும் அரசு திட்டமிட்ட அடிப்படையில் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதன் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறானதொரு முடிவை எடுத்துள்ளது என அறியமுடிகின்றது.


கிழக்கில் எமது மக்களின் காணிகள் சுவீகரிப்பது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் அரசிடம் சுட்டிக்காட்டியும் உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாகவே போராடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என மு.காவின் முக்கிய பிரமுகரொருவர் தெரிவித்தார்.
இதுவிடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் விரைவில் முக்கிய பேச்சுகளில் ஈடுபடவுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்தக் கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் இரு கட்சிகளும் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டங்களை வடக்கு கிழக்கில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடு திரும்பிய பின்னர் இரு கட்சிகளும் சந்தித்துப் பேசும் எனவும் அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment