வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும் இறப்பர் செய்கை பண்ணுவதற்குரிய சாத்தியக் கூறு கள் அதிகளவு இருப்பதை உறுதி செய்துள்ளதால் முதற்கட்டமாக முல்லைத் தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மூன்று ஏக்கரில் இறப்பர் பயரிடப்படவுள்ளதாக பெருந்தோட்டத் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். மீளக்குடியேறும் மக்களுக்கு நிரந்தர வருவாயை பெற்றுக்கொடுக்கும் ஒரு திட்டமாக வடபகுதிக்குரிய பாரம்பரிய பயிர்ச்செய்கையுடன் இறப்பர் பயிர்ச் செய்கையையும் மேற்கொள்ளக்கூடிய விதத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
வவுனியா வடக்கு, தெற்கு பகுதிகளில் 40,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் செய்யப்பட்ட இறப்பர் பயிர்ச்செய்கை வெற்றியளித்துள்ளது.
வடக்கில் இறப்பர் செய்கைக்கு சாத்தியக்கூறு உள்ளதா என்பது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு கடந்த வாரம் தனது அறிக்கையை வெளியிட்டிருந்தது. இதன் பிரகாரம் புதுக்குடியிருப்பு பகுதியில் முதற்கட்டமாக இறப்பர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
பயங்கரவாத யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசு, எல்லாம் முடிந்துவிட்டது என் நிம்மதியாக இருந்துவிடாமல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களும் எமது இலங்கை மக்கள் தான் என்பதை கருத்திற்கொண்டு, ஏனைய சமூகங்களுடன் சரிசமமான உரிமைகளுடன் வாழும் உரிமை அவர்களுக்கும் உண்டு என்பதை கருத்திற் கொண்டு நிரந்தர வருமானம் ஒன்றை ஈட்டித்தரும் விதத்தில் இறப்பர் செய்கைகளையும் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
வடபகுதிக்கே உரித்தான சம்பிரதாய பயிர்களுடன் இறப்பர் செய்கையையும் மேற்கொள்ள முன்வரும் விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கவும் பெருந்தோட்ட த்துறை அமைச்சு ஆயத்தமாக இருக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முல்லைத்தீவு, கிளிநொச்சி மேலதிக அரச அதிபர்களான சீ. ஏ. மோகன்ராஜ், எஸ். ஸ்ரீநிவாசன் ஆகியோரும் இறப்பர் ஆராய்ச்சி சபையின் தலைவர் யூசஸ் பீரிஸ், மற்றும் வடக்கில் ஆய்வுகளை மேற்கொண்ட டாக்டர் லக்ஷ்மன் ரொட்ரிகோ, டாக்டர் எஸ். எம். எம். இக்பால், டாக்டர் சமன் தர்மகீர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment