Tuesday, November 15

தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள அரசாங்க அதிபர்களை நியமிப்பது இனவாதத்தை ஏற்படுத்தும்

 

தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள அரசாங்க அதிபர்களையும் சிங்கள பிரதேசங்களில் தமிழ் அரசாங்க அதிபர்களையும் நியமிப்பது இனவாதத்தை ஏற்படுத்தும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்திற்கு சிங்கள அரசாங்க அதிபரை நியமித்தமை தமிழ் மக்கள் மத்தியிலே அரசாங்கத்தின் மீது இருக்கும் நம்பிக்கை குறைவடையும் என்பதை உணர்ந்து அரசாங்கம் செயல்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
சிங்கள அரசாங்க அதிபர்களை நியமிப்பதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அவர்களுக்கு முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. அரசாங்க அதிபரின் கடமை என்பது மாவட்டத்திற்கு ஒரு முக்கியமான விடயமாகும்.
சிங்கள மொழி தெரிந்த தமிழ் அதிகாரிகளை சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களுக்கு அரசாங்க அதிபர்களாக நியமிக்க முடியுமா என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சரிடம் வினவிய போது சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் மொனராகலை மாவட்டத்திற்கு முல்லைத் தீவிலிருந்த அரசாங்க அதிபரை நியமித்திருப்பதாக தெரிவித்தார்.
இலங்கை நாட்டில் சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்து வாழும் சூழ்நிலை முழுமையான முறையிலே இன்னும் ஏற்படாத சூழ்நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் இன முரண்பாடுகளை மேலும் தோற்றுவிக்கக் கூடும் என்பதை தெளிவு படுத்தியுள்ளேன்.
அதேநேரம் சிங்கள மக்கள் 90 வீதம் வாழும் மொனராகலை மாவட்டத்திற்கு தமிழ் அரசாங்க அதிபரை நியமித்திருப்பது ஒரு புதிய மாற்றமாக நான் கருதுகிறேன். இப்படியான நடவடிக்கைகளின் மூலமாக முழுமையான ஐக்கிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
அதேபோல் வட மாகாண ஆளுநராகவும், கிழக்கு மாகாண ஆளுநராகவும் கடமையாற்றும் முன்னாள் இராணுவத்தை சேர்ந்தவர்களை நீக்கி சாதாரண அரசாங்க அதிகாரிகளை அல்லது அரசியல் வாதிகளை நியமிப்பதன் மூலம் இன ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும்.
மொனராகலை மாவட்டத்திற்கு தமிழ் அரசாங்க அதிபரை நியமித்தது போல மாகாண ஆளுநர்களாகவும் தமிழர்களையும் நியமிப்பதன் மூலம் மேலும் ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.
அதேநேரம் மன்னார் மாவட்டத்திற்கு சிங்கள அரசாங்க அதிபரை நியமித்ததன் மூலம் குழப்ப நிலையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு இன ஐக்கியத்தின் அவசியத்தை அரசாங்கம் தெளிவுபடுத்த தவறியிருப்பதே எதிர்ப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இருப்பினும், கூட வடகிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களில் வசிக்கும் தமிழ் மக்கள் இன்னும் முழுமையாக அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை.
ஆகவே இந்த தருணத்தில் இப்படியான நியமனங்கள் நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கக் கூடியதாக இருக்கும் என்பதும் யதார்த்தமான உண்மையே. அதேநேரம் மன்னார் மாவட்டத்தின் சிங்கள அரசாங்க அதிபரின் நியமனத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலமாக தமிழ் மக்கள் எதிர்க்கக் கூடும்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் மொனராகலை மாவட்டத்தில் நியமனம் பெற்றுள்ள தமிழ் அரசாங்க அதிபரையும் அங்குள்ள சிங்கள மக்கள் எதிர்ப்பார்கள் என்ற நிலையை நாம் புரிந்து கொண்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் எதிர்கால நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு முடிவுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment