உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியை தமிழ் மக்களின் ஆணை என்று ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.
பிரதேசசபைத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் ஆணை குறித்துப் பேசுகிறது. ஆனால் சிறிலங்கா அதிபருக்கு முழு நாடுமே ஆணையை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் உண்மையில் தெருவிளக்குகளை பொருத்துவதற்கும், குடிநீர் குழாய்களை அமைப்பதற்கும் தான் அதிகாரம் கொண்டது.அதற்கே கூட்டமைப்புக்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் படி மக்களின் ஆணை என்பது கருத்து வாக்கெடுப்பு மூலமோ அல்லது அதிபர் தேர்தல் மூலமோ, நாடாளுமன்றத் தேர்தல் மூலமோ தான் பெறப்பட வேண்டும் என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்தவர்களின் நிலை குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரியும், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்தபோது கவலை வெளியிட்டுள்ளது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள பசில் ராஜபக்ச, அவர்கள் நட்பு ரீதியாக கவலையை வெளியிட்டிருந்தால், அதை வரவேற்பதாக கூறியுள்ளார்.
ஆனால் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினையை அமெரிக்கா முதலில் தீர்க்க வேண்டும் என்றும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவை விட தமிழ்நாட்டில் வறுமைநிலை மோசமாக உள்ளதை தான் அறிவேன் என்று கூறியுள்ள அவர், சிறிலங்காவில் இடம்பெயர்ந்தவர்கள் பற்றி கவலைப்பட முன்னர் ஜெயல்லிதா தமிழ்நாட்டில் வறுமை நிலையில் உள்ளவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர்களின் எந்தவொரு கரிசனையும் எமது நல்லிணக்க முயற்சிகளுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று பசில் ராஜபக்ச திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் குழுவில் சிறிலங்காவுக்கான உதவிகளை தடைசெய்யக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், தனது கவலை பொருளாரதார அளவீட்டில் இல்லை என்றும், இது தனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு தகவல் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா இதனை நடைமுறைப்படுத்தும் என்று தான் நினைக்கவில்லை என்றும், முன்னர் ஜிஎஸ்ரி பிளஸ் சலுகையை காட்டி அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும், அதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார். |
No comments:
Post a Comment