Thursday, June 2

முஸ்லிம்களையும் இணைத்துக்கொண்டதாகவே இறுதித்தீர்வு திட்டம் - அரியநேத்திரன்

முஸ்லிம்களையும் இணைத்துக்கொண்டதாகவே இறுதித்தீர்வு திட்டம் - அரியநேத்திரன்
June 2, 2011  09:41 am
Bookmark and Share
அரசாங்கத்துடன் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தீர்க்கமான தீர்வுகள் கிடைக்கும்போது முஸ்லிம் மக்களையும் இணைத்துக்கொண்டதாகவே இருக்கும் என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டதாகவே அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


கல்முனைக்கு விஜயம்செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்முனை வை.எம்.சீ.ஏ.மண்டபத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வில்லியம் தோமஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துலையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெற்றுவந்த பேச்சுவார்த்தைகளில் 6 சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளபோதிலும் தமிழ் மக்கள் இவற்றை அதிர்ச்சி கலந்த ஒரு எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் தங்கை இணைத்துக்கொள்ளாமை குறித்து முஸ்லிம் மக்களிடம் இருந்தும் சில கருத்தக்கள் வந்துள்ளன. உண்மையில் அது நியாயமான கோரிக்கை.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்ட விடயங்களையே அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும் அதனை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.

முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படவில்லை.இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின்போது அவர்களின் அபிலாசைகளும் பிரதிபலிக்கப்பட்டே அரசியல் தீர்வு தயாரிக்கப்படும்.

வடகிழக்கில் தமிழ் மக்கள் தமது ஏக பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தெரிவுசெய்தார்களோ அதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை முஸ்லிம் மக்கள் தெரிவுசெய்துள்ளனர்.

இதன் காரணமாக நாங்கள் முஸ்லிம் காங்கிரசுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுவருகின்றோம். அரசிடம் இருந்து தீர்வைப்பெரும்போது அதில் முஸ்லிம்களும் பங்காளியாக இருப்பார்கள்.

கடந்த 61 வருடகாலத்தில் சிங்கள பெரும்பான்மையாகவுள்ள அரசாங்கங்கள் தமிழ் மக்களை அடிமையாக நடத்தினர். இதன் காரணமாக நாங்கள் பல போராட்டங்களை நடத்தினோம்.அந்த வகையில் வடகிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு அந்த நிலைமை ஏற்பட நாங்கள் தயாரில்லை. அவர்களை நாங்கள் எங்களுடன் இணைந்த சமூகமாகவே பார்க்கின்றோம்.

தமிழ் தேசியத்துக்காகவும் விடுதலைப்போராட்டத்திலும் தமிழ் தலைமைகளாக வடக்கில் உள்ளோரே செல்வாக்கு செலுத்திவந்தனர். தமிழ் மக்களின் அரசியல் பாதையின் முக்கிய இடங்களில் அவர்கள் இருந்தனர்.

ஆனால் கடந்த இரு தேர்தல்களில் அந்த நிலைமை மாற்றி தமிழ் மக்கள் தமது இன உணர்வை சிறப்பாக வெளிப்படுத்தியதன் காரணமாக கிழக்கு மக்கள் தொடர்பில் கொண்டிருந்த கருத்துக்கள் பொய்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அவ்வாறான தமிழ் தலைமைகளையும் போராட்ட தலைமைகளையும் கொண்ட யாழ்ப்பாணத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை ஏனைய மாற்றுக்கட்சியினர் பெற்றுள்ளனர்.

தற்போது எதிர்வரும் ஜுன் மாதம் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் 26 இடங்களில் இரண்டு அம்பாறை மாவட்டத்திலும் 24 இடங்கள் யாழ்ப்பாணத்திலும் இடம்பெறவுள்ளன. இந்த 26 தேர்தல்கள் தொகுதியையும் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பே கைப்பற்றும்.

சென்ற முறை மாற்றுக்கட்சிகளை ஆதரித்த தமிழ் மக்கள் இந்தமுறை உண்மையினை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிப்பார்கள் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.

போராட்டம் முடிவுற்று இரண்டு வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் எமது மக்களுக்கு எதுவித அரசியல் தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை. ஐ.நா.சபையிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.இந்த நிலையில் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமது ஒன்றுபட்ட சக்தியை இந்த தேர்தலில் ஒற்றுமையாக காட்டுவதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலம்மிக்க சக்தியாக மாற்றமுடியும்.

அவ்வாறான நிலையில் இடம்பெற்றுவரும்பேச்சுவார்த்தைகளில் நல்லதொரு தீர்வை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெறக்கூடிய சாத்தியங்கள் உள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment