Sunday, June 23

கன்னியா வெந்நீர் ஊற்றுக்கருகில் விகாரை அமைக்க ஒரு ஏக்கர் காணி!



வரலாற்றுப் புகழ் பெற்ற கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணற்றுக்கருகில் விகாரை அமைக்க வில்கம் ரஜமஹா விகாரை பிரதம குருவுக்கு ஒரு ஏக்கர் காணி அரசாங்கத்தால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை இந்துக்கள் மத்தியில் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது.
இராவணேஷன் புகழ்கொண்டதும் இந்துக்களின் புராண இதிகாசங்களுடன் தொடர்பு கொண்டதுமான கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு நேரே பின்புறம், விகாரையொன்றை அமைப்பதற்கு வில்கம் ரஜமஹா விகாரை பிரதமகுரு கேட்டுக்கொண்டதற்கு அமைய சுமார் 0.4120, ஹெக்டர் காணியை வழங்க கொழும்பு காணி ஆணையாளர் நாயகம் மாகாண காணி ஆணையாளருக்கு அனுமதி வழங்கியதன் பேரில், மேற்படி காணி பௌத்த விகாரை நிறுவ ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த விகாரை இந்துக்கள் தமது ஈமக்கிரியைகளை செய்யும் மடம் அமைந்திருக்கும் இடத்துக்கு அருகிலும், வெந்நீர் ஊற்றுக்கு நேரடியாக அருகிலும் அமைக்கப்படவுள்ளது.
இங்கு தொன்மைமிக்க சிவன் ஆலயமொன்று இருப்பதுடன் இஸ்லாமியர்களை அ.டையாளப்படுத்தும் சமாதியொன்றும் இருக்கின்ற நிலையிலேயே இவ்விகாரை அமைக்கப்படவிருக்கிறது.
தொல்பொருள் ஆய்வு என்ற காரணங்கள் காட்டப்பட்டு இவ்வாறு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலென்றும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விகாரையை நிறுவுவதுடன் பல நூறு வருடங்களாக பாவனையில் உள்ள பாதையை மாற்ற திட்டமிட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

விகாரையை தரிசித்த பின்பே கிணற்றில் நீராடக்கூடிய விதத்திலும் இப்பாதை அமைக்கப்படவிருப்பதாகவும், இதுவரை காலமும் கிணற்றை நேரடியாக அடையக்கூடியதாக இருந்த பாதை தற்பொழுது விகாரையை முதன்மைப்படுத்தி அமைக்கப்படவிருப்பதாகவும் இந்து பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment