Sunday, June 23

பொதுபல சேனாவுக்கு எதிராக கிறிஸ்த்தவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் தெற்கே, களுத்துறையில் மக்கொனை என்ற இடத்தில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனாவுக்கு எதிராக இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மக்கோனை லக்கல குமார கந்தையிலுள்ள தேவாலயத்துக்குரிய மாதா திருச்சொரூபத்திற்கு முன்னால் இருந்த சந்திரவட்டக்கல் வடிவத்திலான வாசற்படியை இரண்டு தினங்களுக்கு முன்னர் சிலர் அங்கிருந்து பலவந்தமாக அகற்றிச் சென்றுள்ளனர்.
அந்த சம்பவத்துக்கு எதிராக கிறிஸ்தவ மக்கள் இன்று காலை முதல் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அந்தப் பிரதேசத்தில் நிலவிய பெரும் பதற்றம் காரணமாக காவல்துறை உயர் அதிகாரிகளும் சிறப்பு அதிரடிப் படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் சந்திரவட்டக்கல்லை அகற்றியவர்கள் தேவாலய நிர்வாகத்திடம் மன்னிப்புகோரிய பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றதாக ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் bbc டம் தெரிவித்தார்.
'சந்திரவட்டக்கல் என்பது அரசர்கள் காலத்திலிருந்து இருந்துவருகின்ற நாட்டின் பாரம்பரிய கலை வடிவம். அது பௌத்த மதத்துக்கு மட்டும் உரியது அல்ல. அது இந்த நாட்டு மக்கள் எல்லோருக்கும் உரிய எங்களின் பாரம்பரிய உரிமை'.அதனை அகற்றிச் சென்றுவிட்டது மட்டுமன்றி அங்கிருந்த கத்தோலிக்க மதகுருமாரையும் அவர்கள் கேவலகமாக பேசியிருந்தார்கள். அதற்கு எதிராகத் தான் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்' என்றார் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர்.
'சந்திரவட்டக்கல் வாசற்படியை பெயர்த்து எடுத்துச் செல்ல பொது பல சேனா பிக்குமார் பொலிசாருடன் தான் வந்திருந்தார்கள். பொலிசார் அதனை பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்' என்றும் அவர் கூறினார்.
முஸ்லிம்களின் ஹலால் உணவு சான்றிதழுக்கு எதிராக இலங்கையில் கடும்போக்கு பௌத்தர்களால் நடத்தப்பட்ட போராட்டமொன்று இலங்கையில் பொது பல சேனா அமைப்பு தொடர்ச்சையாக பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமாகி வருகிறது.
அண்மைக்காலமாக கிறிஸ்தவ அமைப்புகள் மீதும் கிறிஸ்தவ வழிபாட்டிடங்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பிலும் பொது பல சேனா மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2008-ம் ஆண்டு ஜூன் மாதம் கொழும்பின் புறநகர்ப்பகுதியான தலாஹேனவில் உள்ள கல்வாரி கிறிஸ்தவ வழிபாட்டிடம் ஒன்றில் வைத்து பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் கிறிஸ்தவ போதகரை காலால் உதைத்து வழிபாட்டிடத்தை தாக்கியதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment