Friday, June 21

கண்டியில் முஸ்லிம் வைத்தியருக்கு மரண அச்சுறுத்தல் - வாகனத்திற்கும் தாக்குதல்


கடந்த சில தினங்களாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சிங்களப் பெண்கள் பலவந்தமாக கருத்தடை செய்யப்படுகிறார்கள் என சில அரசாங்கத்தின் இனவாதக் கூட்டுக் கட்சிகளின் பிரதிநிதிகள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு வைத்தியசாலையையும் வைத்தியசாலை நிர்வாகத்தையும் மிரட்டி இருப்பதுடன் இதற்குக் காரணம் எனக் கூறப்படும் முஸ்லிம் வைத்தியர்களை மரண அச்சுறுத்தல் விடுத்திருப்பதுடன் அவர்களின் வாகனங்களையும் சேதப்படுத்தி இருப்பது முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாக அமைவதுடன்  இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினத்திற்கு  அச்சுறுத்தலாகவும் அமைகின்றது என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் தெரிவித்தார்.
மத்திய மாகாண சபைக் கூட்டம்  18-06-2013 அன்று மத்திய மாகாண சபை முதல்வர் யசமான தலைமையில் நடைபெற்றபோது சிறப்புரிமை மீறல் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் சகல இனத்தவர்களும் எவ்வித பேதமுமின்றி வாழ வேண்டும் என எவ்வளவதான் எடுத்தரைத்தாலும் இவ்வாறான இனவாத அமைப்புக்கள் ஜனாதிபதியின் தூய  குறிக்கோளை நிர்மூலமாக்க எத்தனிப்பதுடன் இந்நாட்டில் சிறுபான்மையின மக்களை மூன்றாம் தர பிரஜைகளாகவே நோக்குவது வருந்தத் தக்க விடயமாகும்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் கருத்தடை என்பது விரும்பியோ விரும்பாமலோ செய்யத் தகாத காரியமாகும். இவ்வாறு கூக்குரலிடும் இவ்வாறான இவ்வமைப்புக்களின் தூண்டுதல் காரணமாக முஸ்லிம் தாய்மார்களிடத்தில் இரு குழந்தைகளுக்கு மேற்பட்டவர்கள் இருப்பவர்களாயின் அவர்கள் பலவந்தமாக கருத்தடை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நாங்கள் தெட்டத்தெளிவாக அறிந்திருந்தாலும் அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என நாம் மௌனியாக இருப்பது நல்ல நோக்கத்திற்காகவே தவிர வேறு ஒன்றுக்குமில்லை.
எனவே முஸ்லிம்களை தூண்டும் இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம்களின் பாரிய கண்டனத்திற்கு உள்ளாக்கப்படுவதுடன் அரசாங்கத்தின் கூட்டுறவுக் கட்சிகளான இவர்களை அரசாங்கத்திலிருந்து உடனடியாக வெளியேற்றி சுதந்திரமிக்க இலங்கை ஒன்றை தூய்மையான முறையில் உருவாக்க எல்லோரும் முயற்சி செய்வோம் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாருக் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment